இராணுவத்தினரால் ஏமாற்றப்பட்ட பரவிப்பாஞ்சான் மக்கள்!
இராணுவத்தின் கட்டுப்பாட்டில் காணப்படும் கிளிநொச்சி பரவிப்பாஞ்சானிலுள்ள மக்களுக்குச் சொந்தமான அனைத்துக் காணிகளையும் விடுவிக்குமாறு வலியுறுத்தி, பிரதேச மக்கள் நேற்று புதன்கிழமை மீண்டும் குறித்த பகுதிகளில் உள்ள இராணுவ அதிகாரியை சந்திக்க சென்றிருந்தனர்.
சென்றிருந்த மக்களை, சிறிது நேரத்தில் அதிகாரி வருவார் என காக்க வைக்கப்பட்டதையடுத்துஇ இராணுவ மேயர் வெளியில் கலந்துரையாடல் ஒன்றுக்கு சென்றிருப்பதாகக் கூறி நீண்ட நேரம் காக்க வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், குறித்த மேயர் வருகை தராததால் மக்கள் ஏமாற்றத்துடன், திருப்பியனுப்பப்பட்டனர்.
மக்களது காணிகளிலுள்ள இராணுவத்தை வெளியேற்றி, காணிகளை மீள கையளிக்குமாறு வலியுறுத்தி பிரதேச மக்கள் இதற்கு முன்னர் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். இதற்கு தீர்வாக பிரதேசத்தின் ஒரு பகுதி காணியை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கடந்த மாதம் உறுதியளித்திருந்தார்.
எனினும், ஏனைய காணிகளையும் விடுவித்து தமது சொந்த இடத்தில் குடியேறுவதற்கு வழி செய்ய வேண்டுமென வலியுறுத்தியே பிரதேச மக்கள் இன்றைய தினம் குறித்த இராணுவ அதிகாரியை சந்திக்கச்சென்றிருந்தனர்.
பல வருட காலமாக வாடகை வீடுகளிலும், உறவினர் வீடுகளிலும் தங்கி பல சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக தெரிவிக்கும் பரவிப்பாஞ்சான் மக்கள், இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், மீண்டும் ஒரு கிழமைக்குள் தமக்கு தீர்வு எட்டாவிட்டால், வருகின்ற சனிக்கிழமையில் இருந்து தமது காணிகளை விடுவிக்கும் வரை முகாம் முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்த இருப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்