Breaking News

மீள்குடியேற்றச் செயலணி விவகாரம் - விக்கியை ஒதுக்கினார் ரணில்



வடக்கு மாகாணத்தில் சிங்கள, முஸ்லிம் மக்களை மீளக்குடியேற்றுவதற்காக சிறிலங்கா அரசாங்க த்தினால் உருவாக்கப்பட்ட மீள்குடியேற்றச் செயலணியில் வடக்கு மாகாண முதலமைச்சரை உள்ளீர்ப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் மறுத்துள்ளது.

அமைச்சர்கள் ரிசாத் பதியுதீன், பைசர் முஸ்தபா, சுவாமிநாதன் ஆகியோரை இணைத் தலைவர்களாகக் கொண்டு அண்மையில் மீள்குடியேற்றச் செயலணி ஒன்றை சிறிலங்கா அதிபர்  மைத்திரிபால சிறிசேன நியமித்திருந்தார்.

வடக்கில் மேற்கொள்ளப்படும் மீள்குடியேற்றச் செயற்பாடுகளில் வடக்கு மாகாணசபை புறக்கணிக்கப்பட்டிருப்பது குறித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தி அடைந்துள்ளது.

நேற்று நாடாளுமன்றத்தின் உரையாற்றிய கூட்டமைப்பின் உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், மீள்குடியேற்றச் செயலணியில் வடக்கு மாகாண முதலமைச்சரையும் உள்ளடக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

எனினும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அந்தக் கோரிக்கையை உடனடியாகவே நிராகரித்தார்.

“ வடக்கு மாகாணசபையின் நிர்வாகத்தில் தலையீடு செய்கின்ற எண்ணம், சிறிலங்கா அரசாங்கத்துக்குக் கிடையாது.

வடக்கு மாகாணம் தொடர்பான விவகாரங்களில், வடக்கு மாகாணசபையுடனும், வடக்கு மாகாண முதலமைச்சருடனும் அரசாங்கம் இணைந்து செயற்படுகிறது.

எனினும், மீள்குடியேற்றச் செயலணி அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது. அமைச்சரவை மட்டக் குழுவில், முதலமைச்சருக்கு இடமளிக்க முடியாது” என்று ரணில் விக்கிரமசிங்க திட்டவட்டமாகத் தெரிவித்தார்.