Breaking News

நாட்டை சீரழிக்க முன்னர் ஜனாதிபதி மைத்திரி உண்மைகளை வெளியிட வேண்டும்



நாட்டின் முக்கிய பிரச்சினைகளை கையாள்வதில் பிரதான எதிர்க்கட்சி மௌனம் காக்கின்றது. பிரதான எதிர்க்கட்சி துடிப்பாக செயற்பட்டால் வேறு எவரும் தம்மை எதிர்க்கட்சி என கூறவேண்டிய தேவை ஏற்படாது என மக்கள் விடுதலை முன்னணி குறிப்பிட்டது. மஹிந்த ராஜபக்ஷ அணியினர் குழப்பங்களை ஏற்படுத்தி நாட்டை சீரழிக்க முன்னர் ஜனாதிபதி மைத்திரி உண்மைகளை வெளியிட வேண்டும் எனவும் அக்கட்சி தெரிவித்தது. 

மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கருத்து தெரிவிக்கும் போதே கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், 

நாட்டில் பிரதான பிரச்சினைகளை கையாள்வதில் அரசாங்கம் மிகவும் மோசமான நிலையில் செயற்பட்டு வருகின்றது. மக்களின் வாழ்வாதார பிரச்சினைகள் மற்றும் வேலைவாய்ப்பு விடயங்களை அரசாங்கம் தான்தோன்றித்தனமாக செயற்பட்டு வருகின்றது. அதேபோல் சர்வதேச நாடுகளுக்கு இடமளித்து அதன் மூலமாக நாட்டை சீரழித்து வருகின்றது. இந்தவிடயங்களால் பிரதான எதிர்க்கட்சி வாய்திறக்காது செயல்படுகின்றது என்பது உண்மையே. நாம் ஒருபுறம் எம்மாலான சகல அழுத்தங்களையும் அரசாங்கத்துக்கு எதிராக கொடுத்து வருகின்றோம். 

எனினும் பிரதான எதிர்க்கட்சி இந்த விடயங்களில் மிகவும் அமைதியாக செயற்படு வருகின்றது. இவ்வாறு பிரதான எதிர்க்கட்சி மௌனமாக செயற்படுவதே ஏனையவர்கள் தம்மை எதிர்க்கட்சி என கூறும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது. ஒரு சிலர் தமது இனவாத கருத்துக்களை பரப்பியும் எதிர்க்கட்சி என கூறிக்கொண்டு தமது ஊழல் மோசடிகளை மறைக்க முயற்சித்து வருகின்றனர். ஆகவே பிரதான எதிர்க்கட்சி துல்லியமாக செயற்பட வேண்டும். 

அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் குழப்பங்கள், அவர்களில் ஒருசிலர் மீது எடுத்துள்ள நடவடிக்கைகள் என்பன நாட்டில் பிரதான பிரச்சினைகள் அல்ல. இந்த பிரச்சினைகளை ஊடகங்கள் பெரிது படுத்தி மக்களின் பிரதான பிரச்சினைகளை பின்தள்ளவேண்டாம். அதேபோல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்பிலான உண்மைகளை மூடிமறைப்பதன் மூலம் ஜனாதிபதி தன்னை நம்பி வாக்களித்த மக்களை ஏமாற்றுகின்றார். 

தனக்கு தேவைப்படும் போது மஹிந்தவை காப்பாற்றுவதும் கட்சிக்குள் சிக்கல் ஏற்படும் நிலையில் அவர் தொடர்பிலான உண்மைகளை வெளியிடுவேன் என கூறுவதும் தனது சுயநலத்தையே வெளிப்படுத்துகின்றது. ஆகவே மஹிந்த அணியினர் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்த முன்னர் ஜனாதிபது உண்மைகளை வெளியிட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.