Breaking News

விஷ ஊசி விவகாரம்! ஐநாவுக்கு அவசர கடிதம்



முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வின்போது விச ஊசி ஏற்றப்பட்டுள்ளதாக சர்ச்சை உருவாகியுள்ள நிலையில், இது தொடர்பாக சர்வதேச விசாரணை நடாத்தப்படவேண்டுமென ஐநாவுக்கு அவசர கோரிக்கைக் கடிதமொன்றினை நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமாரன் அனுப்பியுள்ளார்.

இக்கடிதமானது ஐநாவின் பொதுச் செயலர் பான்கிமூன், மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹூசைன், கடத்தப்பட்டோர் விவகாரங்களுக்கான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர், உடல்நல விகாரங்களுக்கான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் மற்றும் உண்மைக்கும் நீதிக்குமான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் ஆகியோருக்கே உருத்திரகுமரன் இக்கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார்.

தடுப்புக் காவலில் இருந்தவர்கள் குறுகிய காலத்திற்குள் மரணமடையும் வகையில் திட்டமிட்டு விஷ ஊசி ஏற்றப்பட்டிருந்தால், அது மனிதத் தன்மையற்ற செயலெனவும் தெரிவித்துள்ளார்.

சுதந்திரமானதும் நம்பிக்கைக்குரியதுமான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு இலங்கையின் நீதித்துறை இன்னும் தயாராக இல்லையென ஐ.நா ஏற்கனவே தெரிவித்திருந்ததை குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள உருத்திரகுமரன், விஷ ஊசி விடயத்தில் நம்பிக்கைக்குரிய வகையில் விசாரணை நடத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், ஐநா இதில் உடனடியாக தலையிட்டு விசாரணை நடாத்தப்படவேண்டுமெனவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி வழங்கப்படவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.