நீதிக்கான நடைபயணத்திற்கு த.தே.கூ இளைஞர் அணி ஆதரவு
தமிழர் தாயகத்தில் சிங்கள பௌத்த மயமாக்கலை எதிர்த்து எதிர்வரும் 22 ஆம் திகதி கிளிநொச்சியில் நடைபெறவிருக்கும் நீதிக்கான நடை பயணத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இளைஞர் அணியும் ஆதரவு தெரிவித்துள்ளது.
திட்டமிட்ட வகையில் மிகவும் சூசகமாக தமிழர் தாயகப் பகுதிகளில் பௌத்த விகாரைகளையும் புத்தர் சிலைகளையும் நிறுவி இராணுவப் பபலத்துடன் தமிழர் தாயகத்தை சிங்கள மயமாக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் இளைஞர் அணி விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் இளைஞர் அணி, எமது தாயகப் பிரதேசம் எமக்கே சொந்தமானது எனவும் கூறியுள்ளது.
எமது இனத்தின் தனித்துவத்தைக் பாதுகாத்து எமது நிலைத்திருப்புக்கான செயற்பாடுகளை நாமே செய்ய வேண்டும் எனவும் நாம் அதைச் செய்யத் தவறும் பட்சத்தில் எமது தமிழர் தாயகப் பிரதேசம் அனைத்தும் பௌத்த பேரினவாதத்தால் விழுங்கப்பட்டு இறுதியில் எமது தமிழினம் அழித்தொழிக்கப்பட்டு விடும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எனவே ஈழத்தில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கு நீதி கோரியும் தமிழர் தாயகப் பிரதேசங்களின் சிங்கள பௌத்த மயமாக்கலை எதிர்த்தும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தக் கோரியும் காணாமற்போனோரைக் கண்டறியக் கோரியும் வலியுறுத்தி மேற்கொள்ளப்படும் 'நீதிக்கான நடைபயணத்திற்கு பூரண ஆதரவைத் தெரிவிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட இளைஞர் அணி அறிவித்துள்ளது.
கிளிநொச்சி மாவட்ட கிராம அபிவிருத்திச் சங்கங்களின் சமாசமும் பொது அமைப்புக்களின் ஒன்றியமும் இணைந்து, முன்னெடுக்கும் நீதிக்கான நடைபயணம் எதிர்வரும் 22 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 7.30 மணியளவில் ஆனையிறவிலிருந்து ஆரம்பமாகி, கிளிநொச்சி ஜ.நா பணியகம் வரை செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.