Breaking News

கிளிநொச்சியில் விஹாரை அமைக்கக் கூடாது : பிரேரணை நிறைவேற்றம்



கிளிநொச்சி-கனகாம்பிகை அம்மன் ஆலய வளாகத்திற்குள் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விஹாரை அமைப்பு பணிகளை நிறுத்தவேண்டுமெனவும் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை கோயிலுக்கே மீள வழங்கவேண்டும் எனவும் ஐனாதிபதி மற்றும் பிரதமரை கோரும் தீர்மானமொன்று வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற வட மாகாண சபையின் 59ஆவது அமர்வில் மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை மேற்படி தீர்மானத்தை விசேட கவனயீப்பு பிரேரணையாக சபைக்கு முன்வைத்திருந்த நிலையில், குறித்த பிரேரணை சபையில் எந்தவித ஆட்சேபனையும் இல்லாமல் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த விசேட கவனயீர்ப்பு பிரேரணையை முன்வைத்து பசுபதிப்பிள்ளை உரையாற்றுகையில், ”கிளிநொச்சி கனகாம்பிகை அம்மன் ஆலயத்தின் ஐயருடைய வீட்டையும் நான்கரை ஏக்கர் நிலத்தையும் பிடித்து வைத்திருக்கும் படையினர், ஐயருடைய வீட்டின் முன்பாக விஹாரை அமைக்கின்றனர். இதற்காக ஒவ்வொரு பௌத்தனும் வெட்கப்படவேண்டும்.

இப்படித்தான் தம்புள்ள பகுதியில் 150 வருடங்கள் பழமையான காளி கோயிலை உடைத்து பௌத்த விஹாரையை அமைத்தனர். அவ்வாறான நிலைமையை இங்கும் உருவாக்கும் செயற்பாட்டில் தற்போது ஈடுபட்டுள்ளனர். இச்செயற்பாட்டை நிறுத்தி, கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை கோயிலுக்கே மீள வழங்க வேண்டுமென ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை விடுக்க வேண்டும்” என்றார்.

குறித்த பிரேரணை விரைவில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.