Breaking News

சுமந்திரன் முன்னிலையில் மகிந்தவை விசாரணைக்கு அழைக்க வேண்டும்!

அரச கணக்குகளில் இருந்து மறைத்து வெளிநாட்டு கடன்களை பெற்றுக்கொண்டமை தொடர்பான விசாரணைக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தலைமையிலான நாடாளுமன்ற குழுவின் முன்னிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அழைக்கவேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் (புதன்கிழமை) இம்பெற்ற நாடாளுமன்ற அமர்விலேயே அவர் இவ்விடயத்தை தெரிவித்தார். பிரதமர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-

”நாடு தற்போது 9.5 மில்லியன் கடன் சுமையை எதிர்நோக்கியுள்ளது. இதுகுறித்து ஆராய்வதற்காக கடந்த மார்ச் மாதம் முதல் மூவரடங்கிய குழுவொன்று செயற்பட்டு வருகின்றது. அவர்களது அறிக்கை வெளியான பின்னர் கடன் குறித்த சரியான தகவலை வெளிப்படுத்த முடியும்.

கடந்த அரசாங்கத்தைப் போன்று தொடர்ந்து கடன்பெறுவதால் இப் பிரச்சினை தீரப் போவதில்லை. நாட்டின் வருமானத்தை அதிகரிப்பதன் மூலமே இந்த அபாயகரமான நிலையிலிருந்து நாட்டைக் கட்டியெழுப்பலாம். அதற்கென புதிய வரி நடைமுறையொன்றையும் வருமானத்தை அதிகரிப்பும் திட்டமொன்றையும் எதிர்வரும் 2017ஆம் ஆண்டுக்குள் அறிமுகப்படுத்துவது அவசியமாகும். இதுகுறித்து சர்வதேச நாணய நிதியத்திடமும் நாம் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றோம்” என்றார்.

இதன்போது குறிக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கடந்த ஆட்சிக்காலத்தில் ஜனாதிபதியே நிதியமைச்சராக செயற்பட்ட நிலையில், அவரது அனுமதியை பெற்றா கடன்கள் பெறப்பட்டதென கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளித்த பிரதமர் ”நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தலைமையில் நிதிக் குழுவொன்று உள்ளது. முன்னாள் நிதியமைச்சர் என்ற ரீதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை அழைத்து விசாரணைகளை மேற்கொள்ள முடியும். அதன் பின்னர் குறித்த அறிக்கையை எம்மிடம் கையளிக்கலாம்” என்றார்.