அமெரிக்க தேர்தல் பிரசாரம்: டிரம்பின் கருத்தால் புதிய சர்ச்சை
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் தனது பிரசாரத்தின் போது அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வருகிறார். இதில் சமீபத்திய சர்ச்சை, துப்பாக்கி ஆர்வலர்களுக்கு அவர் விடுத்த அழைப்பு பற்றியது ஆகும்.
அமெரிக்க அரசியல் சட்டத்தின் 2-வது திருத்தத்தின்படி ஒருவர் துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமை வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால் துப்பாக்கி உரிமையாளர்கள், ஆர்வலர்கள் பயன்பெற்று வருகிறார்கள்.
ஆனால் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி, இந்த 2-வது திருத்தத்தை ஒழிக்க விரும்புவதாகவும், அவர் நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் பெற்றால் துப்பாக்கி ஆர்வலர்களால் எதுவும் செய்ய முடியாது எனவும் நேற்று முன்தினம் வடக்கு கரோலினாவில் நடந்த பிரசாரத்தின் போது டிரம்ப் கூறினார். எனவே ஹிலாரி ஜனாதிபதி ஆவதையும், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளை தேர்ந்தெடுப்பதையும் நீங்கள் தடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
டிரம்பின் இந்த பேச்சு அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவரது கருத்துகள் ஹிலாரிக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் இருப்பதாக ஜனநாயக கட்சியினர் மட்டுமின்றி, டிரம்பின் குடியரசு கட்சியினரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். எனினும் தனது கருத்தை நியாயப்படுத்தி உள்ள டிரம்ப், தங்கள் வாக்குகளின் மூலம் மட்டுமே ஹிலாரியை ஜனாதிபதியாகாமல் தடுக்குமாறு தனது ஆதரவாளர்களை கேட்டுக்கொண்டதாக கூறியுள்ளார்.