Breaking News

மைத்திரிக்கு எதிரான போர் எச்சரிக்கை விடுத்தவர்களைக் கண்டறிய தீவிர விசாரணை



சிறிலங்கா அதிபருக்கு எதிராக சைபர் போரைத் தொடுத்துள்ளவர்களைக் கண்டறியும் தீவிர விசாரணைகளில், குற்றப் புலனாய்வுப் பிரிவினரும், சிறிலங்கா கணினி அவசர தயார்நிலைக் குழுவும், ஈடுபட்டுள்ளன.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அதிகாரபூர்வ இணையத் தளமான www.president.gov.lk , இணைய ஊடுருவல்காரர்களால் முடக்கப்பட்டதுடன், சிறிலங்கா அதிபருக்கு எதிரான சைபர் போரைத் தொடுத்துள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

தற்போது, தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ள சிறிலங்கா அதிபரின் இணையத் தளத்தை மீள ஆரம்பிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் சிறிலங்கா அதிபரின் அதிகாரபூர்வ இணையத்தளத்தின் பாதுகாப்பு வளையத்தை ஊடறுத்து, அதனைச் செயலிழக்கச் செய்த, இணைய ஊடுருவல் காரர்களைக் கண்டறியும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உள்நாட்டில் இருந்தே இந்த இணையப் போர் தொடுக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், சம்பந்தப்பட்டவர்களை விரைவில் கண்டுபிடித்து விட முடியும் என்று சிறிலங்கா கணினி அவசர தயார்நிலைக் குழு தெரிவித்துள்ளது.

இந்த இணையப் போர் எச்சரிக்கை குறித்து சிறிலங்காவின் குற்றப் புலனாய்வுப் பிரிவும் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.