தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும்! - மாவை
போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணை வேண்டும் என்றே மக்கள் கருத்தறியும் நல்லிணக்க செயலணியிடம் தமிழ் மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். எனவே, தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும்.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். உண்மைகள் கண்டறியப்பட்டு, பொறுப்புக்கூறல் உரிய முறையில் நடைபெற்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைத்தால்தான் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐ.நா. தீர்மானத்தின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு. இந்நிலையில்இ போர்க்குற்ற விசாரணைகளை எவ்வாறு முன்னெடுப்பது மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடிக் கண்டறியும் அலுவலகத்தை எவ்வாறு அமைப்பது என்பன தொடர்பில் மக்கள் கருத்தறியும் நல்லிணக்க செயலணியால் தற்போது வடக்கில் மக்களிடம் கருத்தறியப்பட்டு வருகின்றது
.இந்த அமர்வுகளில் பங்குபற்றும் மக்கள் போர்க்குற்ற விசாரணையிலும், காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடிக் கண்டறியும் அலுவலகத்திலும் சர்வதேச நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும் என்றும், உள்நாட்டு நீதிபதிகளில் தமக்கு சிறிதளவேனும் நம்பிக்கை இல்லை எனவும் தெரிவித்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள், தாம்பட்ட துன்ப துயரங்களை தற்போது நல்லிணக்க செயலணி அமர்வுகளில் பகிரங்கமாகவே வெளிப்படுத்தி வருகின்றனர். நடந்தேறிய போர்க்குற்றங்களுக்கும், மனித உரிமை மீறல்களுக்கும் சர்வதேச விசாரணையே வேண்டும் எனவும் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஏனெனில், உள்நாட்டு விசாரணையில் அவர்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள்.
எனவே, ஐ.நா தீர்மானத்தின் பரிந்துரைக்கமைய சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்புடன் சர்வதேச விசாரணைப் பொறிமுறையை அரசு உடன் அமைக்க வேண்டும். அந்த விசாரணை மூலம்தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும். எமது இந்த நிலைப்பாடு தொடர்பில் சர்வதேச பிரதிநிதிகளிடம் நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்’ என மாவை சேனாதிராஜா மேலும் தெரிவித்தார்