மாவீரர்களுக்கான நினைவு தினம் கொண்டாடுவதற்கு அனுமதிக்க வேண்டும்
காணாமல் போனோர் தொடர்பான விசாரணை களுக்கான நிரந்தர அலுவலகம் கிளிநொச்சியில் அமைக்கப்பட வேண்டும் என நல்லிணக்க செயலணியில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்பகுதியில் 80 வீதமானவர்கள் போதைப்பொருள் மற்றும் பாலியல் ரீதியிலான குற்றச்சாட்டை மேற்கொண்டவர்களே காணாமல் போயுள்ளதாகவும் வடக்கு தமிழ் மக்கள், இராணுவத்தினரால் கடத்தப்பட்டே காணாமல் போயுள்ளதனால் காணாமல் போனவர்களுக்கான நிரந்தர அலுவலகத்தை கிளிநொச்சியில் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள நல்லிணக்கப் பொறிமுறையின் மக்கள் கருத்தறியும் அமர்வு இன்று புதன்கிழமை கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது.
இதன்போது, கிளிநொச்சி மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் செயலணியின் முன் முன்னிலையாகி கருத்துக்களை வெளியிட்டு வருகின்ற நிலையில், கிளிநொச்சி கிராம அபிவிருத்தி சமாசங்களில் சங்கத் தலைவர் த. ஜெயக்குமார் தனது கருத்துக்களை இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களுக்கான தீர்வு சரியான முறையில் கையாளப்பட வேண்டும் என்றும் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து உயிர்நீத்த மாவீரர்களுக்கான துயிலும் இல்ல நினைவு தினம் கொண்டாடுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஸ்ரீலங்காவில் ஜே.வி.பியில் இருந்து உயிர்நீத்த வீரர்களுக்கு நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில், ஏன் விடுதலைப் புலிகளில் இருந்து உயிர்நீத்த வீரர்களுக்கான நினைவு தினத்தை அனுஷ்டிப்பதற்கு அனுமதி மறுக்கப்படுகின்றது என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.