Breaking News

விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி வெளியிடப்பட்டதா "ஒரு கூர்வாளின் நிழலில்"



எமக்கு ஒரு தலைவன் இருந்தான். அவன் மூலம் எங்களுக்கு ஒரு கௌரவமான வாழ்க்கை வரும் என நினைத்தோம். ஆனால் மீண்டும் ஒரு இனத்தின் கீழ் அடிமைகளாக வாழ்வோம் என யாரும் நினைக்கவில்லை.

எங்கள் இனம் காப்பாற்றப்படுவதற்கு அரசியல் ரீதியாக எடுக்கப்படுகின்ற முயற்சிகள் எந்தளவிற்கு சாத்தியப்படும் என்பது தெரியாது.

சிங்களத் தலைவர்கள் யாராக இருந்தாலும் எமக்கான தீர்வைத் தரப் போவதில்லை. இதுவே வெளிப்படையான உண்மை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இதனை தெரிவித்துள்ளார். வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், தமிழினியினுடைய நூல் வெளியீட்டை திட்டமிட்டு இராணுவப் புலனாய்வாளர்கள் வெளியிட்ட நூலாகத்தான் நான் பார்க்கின்றேன்.

அது உண்மையான விடயமும் கூட. ஏனெனில் நான் அவரை நன்கு அறிவேன். அவர் அப்படியான நூல் ஒன்றை எழுதியிருக்க மாட்டார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தியே "ஒரு கூர்வாளின் நிழலில்" என்ற அந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது.

வீரம் நிறைந்த மண்ணில் பிறந்த ஒருவர் "ஒரு கூர்வாளின் நிழலில்" என்ற நூலை எழுதியிருக்க மாட்டார். இவ்வாறான நிலையில் எமது இனத்தின் அடையாளங்களைக் காப்பாற்ற வேண்டிய தேவை உங்களது கைகளிலேயே உள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.