'டிரம்ப் அதிபரானால் அமெரிக்காவுக்கு ஆபத்து'
'அமெரிக்க அதிபராக, குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டால், நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படும்,'' என, அவரது கட்சியைச் சேர்ந்த, முக்கிய பிரமுகர்கள், 50 பேர் கூறியுள்ளதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல், நவம்பர், 8ல், நடக்க உள்ளது; இதில் குடியரசு கட்சியின் சார்பில், பிரபல ரியல் எஸ்டேட் தொழிலதிபர் டொனால்டு டிரம்ப், 70; ஜனநாயகக் கட்சியில், முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், 68, வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.டொனால்டு டிரம்ப், பிரசார
கூட்டங்களில், சர்ச்சைக்குரிய வகையிலும், ஹிலாரியை கடுமையாக விமர்சித்தும் பேசி வருகிறார். இதனால், ஒரு தரப்பினர், அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அவர் சார்ந்துள்ள குடியரசு கட்சியின், வெளியுறவு கொள்கை ஆய்வாளர்கள், 50 பேர், கூட்டாக எதிர்ப்பு தெரிவித்து, அறிக்கை வெளியிட்டுள்ளனர். அமெரிக்க புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ.,வின் முன்னாள் இயக்குனர் மிச்சேல் ஹைடன் உள்ளிட்டோர் இதில் கையெழுத்திட்டுள்ளனர்.
அவர்கள் கூறியுள்ளதாவது: நாங்கள் அனைவரும், டிரம்ப்க்கு ஓட்டுப்போட மாட்டோம். வெளியுறவு கொள்கை அடிப்படையில் பார்த்தால், அதிபர் பதவியை ஏற்க, அவருக்கு தகுதி இல்லை. அப்படி அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால், ஆபத்தான அதிபராக இருப்பார்; அவரால், அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு ஆபத்து தான்.நாட்டை வழி நடத்தும் அளவிற்கு, அவரிடம் பண்பு, குணநலன்கள், அனுபவம் இல்லை. அமெரிக்க அரசியல் சட்டத்தை பற்றிய அடிப்படை அறிவோ, நம்பிக்கையோ அவரிடம் இல்லை. அமெரிக்காவிற்கு உள்ள ராஜதந்திர சவால்கள் குறித்து, அவருக்கு எதுவும் தெரியவில்லை.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
டிரம்ப் பதிலடி : டிரம்ப் கூறியுள்ளதாவது: என்னை பற்றி விமர்சித்துள்ள முன்னாள் வெளியுறவுத்துறை அதிகாரிகள் பலரும் தோல்வியடைந்தவர்கள். அவர்கள், ஹிலாரியுடன் சேர்ந்து, அமெரிக்காவை தவறாக வழி நடத்தியவர்கள். மேற்காசிய பகுதியில், அமெரிக்க வீரர்கள் பலியாகும் சூழல் ஏற்பட்டதற்கு, அவர்களது தவறான அணுகுமுறையே காரணம்.
ஐ.எஸ்., பயங்கரவாதிகள் வளரவும், இவர்களே காரணம். வெளியுறவு கொள்கையை சரியாக கையாள தெரியாமல், அமெரிக்காவின் நலனை பலிகொடுத்தவர்கள். இவ்வாறு அவர் கூறினார்.