Breaking News

தேர்தலை இரத்து செய்யக் கோரிக்கை!



கடந்த ஐந்து வருடகாலமாக ஒத்திவைக்க ப்பட்டுள்ள புதுக்குடியிருப்பு மற்றும் கரைதுறைப்ப ற்று தேர்தலை இரத்துச் செய்யுமாறு கபே அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபைகளுக்கான வேட்புமனுத் தாக்கல் குளறுபடி காரணமாக தொடுக்கப்பட்ட வழக்கின் அடிப்படையில், குறித்த பிரதேச சபைகளுக்கான தேர்தல், கடந்த 2011ஆம் ஆண்டு தொடக்கம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

2011ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பின் அடிப்படையில் குறித்த தேர்தலை நடத்த, கடந்த 2015ஆம் ஆண்டில், நல்லாட்சி அரசாங்கம் முயற்சித்த போதிலும், அதற்கு எதிராக மீண்டும் வழக்குத் தொடரப்பட்டதை அடுத்து, அத்தேர்தல், மற்றொருமுறை ஒத்திவைக்கப்பட்டது.

இலங்கை அரசியல் சட்டத்தின் பிரகாரம், தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், எந்தவொரு அரசியல் கட்சியையும் பதிவு செய்ய முடியாது. இதன் காரணமாக, கடந்த 2011ஆம் ஆண்டு தொடக்கம் எந்தவொரு அரசியல் கட்சியும் இதுவரை பதிவு செய்யப்படவுமில்லை. இதனைக் கருத்திற்கொண்டு, ஒத்திவைக்கப்பட்டுள்ள புதுக்குடியிருப்பு மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபைகளுக்கான தேர்தல்களை, விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக இரத்துச் செய்யுமாறு கபே அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதன் மூலம், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல்களின் போது, புதிய கட்சிகள் தேர்தல்களில் போட்டியிடும் சந்தர்ப்பம் ஏற்படும் என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பாக பதிலளித்துள்ள உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு, குறித்த பிரதேச சபைகளுக்கான தேர்தல்களை இரத்துச் செய்வது தொடர்பாக, நாடாளுமன்றத்தில் பிரேரணையொன்றைச் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.