ஆலயத்தின் காணிக்குள் விகாரை அமைக்கும் இராணுவம்!
கிளிநொச்சி இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தின் மூன்றாவது வீதி காணப்படுகின்ற ஆலயத்திற்குச் சொந்தமான காணிக்குள் மிகப்பெரும் விகாரைக்கான சுற்றுமதில் அமைக்கும் பணியில் இராணுவத்தினர் மிக தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர் என ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
1957 ஆம் ஆண்டு இரனைமடு குளத்தினை தீர்த்த தளமாக கொண்டு யோகர் சுவாமிகளால் ஆரம்பிக்கப்பட்ட இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்திற்கு 13.5 ஏக்கர் காணி இருந்தது. இதில் தற்போது ஒன்பது ஏக்கர் காணி மாத்திரமே ஆலய நிர்வாகத்தின் கீழ் காணப்படுகிறது.
மிகுதி 4.5 ஏக்கர் காணியும் இராணுவத்தின் பிடியில் இருக்கிறது. எனவே குறித்த காணியை மீண்டும் ஆலயத்திற்கு பெற்றுத்தருமாறு ஆலய நிர்வாகம் 2009 இற்கு பின்னர் அதிகாரிகள், அரசியல்வாதிகள், இராணுவத்தினர் என பலரிடமும் பல தடவைகள் கோரியும் இதவரைக்கும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
இந்து கலாசார மற்றும் மீள் குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனின் கவனத்திற்கும் இவ்விடயம் கொண்டு செல்லப்பட்டும் நடவடிக்கைகள் ஆரோக்கியமான நடவடிக்கைகள் இல்லை.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் அமைச்சர் சுவாமிநாதனை அழைத்து வந்து நிலைமைகளை நேரில் காட்டியமைக்கு அமைவாக இராணுவத்தின் பிடியில் இருந்து தீர்த்த தளத்திற்குச் செல்கின்ற ஆலயத்தின் முன் வீதி மீளவும் ஆலயத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் காணி இன்றும் இராணுவத்தின் பிடியிலேயே உள்ளது.
கடந்த 14-07-2016 அன்று 99 அடி உயரம் கொண்ட இராஜகோபுரம் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இரணுவம் ஏற்கனவே திட்டமிட்டு ஆரம்ப கட்டப் பணிபகளை மட்டும் மேற்கொண்டிருந்த சுமார் நூறு அடி உயரம் கொண்டதாக அமையும் வகையில் அமைக்கப்பட்டிருந்த விகாரைக்கான பணிகளை துரிதமாக முன்னெடுக்க தொடங்கியுள்ளனர்.
ஆலயத்திலிருந்து நூறு மீற்றருக்குள் இந்த விகாரை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்னதாக பெரியளவிலான புத்தர் சிலை அங்கு நிர்மாணிக்கப்பட்டுவிட்டது. அதற்காகவே ஆலயத்தின் மூன்றாவது வீதி அமைந்துள்ள ஆலயத்திற்குச் சொந்தமான காணியில் இதுவரை காலமும் தற்காலிகமாக தூண் போடப்பட்டு இராணுவத்தினரால் வேலி அமைக்கப்பட்டிருந்தது.
எனவே குறித்த காணியையும் மீண்டும் ஆலயத்திற்கு பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிகை ஆலய நிர்வாகத்திடம் இருந்து வந்தது. ஆனால் தற்போது இராணுவம் நிரந்தரமாக சுற்று மதில் அமைக்கும் பணியில் ஈடுப்பட்டிருப்பதானது ஆலயத்தின் காணி மீண்டும் ஆலயத்திற்கு கிடைக்க வாய்ப்பில்லை என்ற நிலைப்பாட்டினையே ஏற்படுத்தியுள்ளது என ஆலய நிர்வாகம் கவலை தெரிவிக்கிறது.
வரலாற்று சிறப்புமிக்க ஆலயத்திற்கு மிக அருகில்இ முழுக்க முழுக்க தமிழ் மக்கள் வாழ்கின்ற ஒரு பிரதேசத்தில் பாரிய விகாரை அமைப்பது பொது மக்கள் மத்தியிலும் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எற்கனவே நாடெங்கிலும் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க சைவ ஆலயங்களுக்கு அருகில் விகாரைகளை அமைத்து சிங்கள மையமாக்களை மேற்கொண்டு வரும் அரசின் ஒரு செயற்பாடாக இதுவும் காணப்படுகிறதா என மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
எனவே உரிய அமைச்சர்கள், அரசியல் தரப்புக்கள், அதிகாரிகள் இது விடயத்தில் விரைந்து தலையிட்டு ஆலயத்திற்குச் சொந்தமான காணியை மீண்டும் ஆலயத்திற்கு மீட்டுத்தருமாறு பொது மக்களும் ஆலய நிர்வாகமும் கோரி நிற்கின்றனர்.