அலெப்போவில் 48 மணி நேர போர் நிறுத்தம்: ரஷியா ஒப்புதல்
ஐ.நாவின் சிரியாவிற்கான தூதரின் உணர்ச்சிமிக்க வேண்டுகோளுக்கு இணங்க அலெப்போவில் 48 மணி நேர போர் நிறுத்தத்தை அமல்படுத்தத் தயாராக உள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
மனிதாபிமான உதவிகள் விநியோகிக்க ஏதுவாக, இரண்டு நாள் போர் நிறுத்தம் அடுத்த வாரத்தில் செயல்படுத்தப்படலாம் என மாஸ்கோவில் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் மூன்று மணி நேரத்திற்கு மட்டுமே போர் நிறுத்தம் செய்யப்படும் என ரஷியா தெரிவித்திருந்தது.
முன்னதாக இந்த மாதத்தில் இதுவரை சிரியாவின் முற்றுகையிடப்பட்ட நகரங்களை, ஒரு உதவி வாகனம் கூட சென்றடையவில்லை எனத் தெரிவித்த ஐநாவின் சிறப்பு தூதர் ஸ்டஃபன் டீ மிஸ்டுரா, சிரியாவில் போர் புரிந்து வரும் தரப்புகளை கடுமையாக எச்சரித்துள்ளார்.
உதவி விநியோகம் நடைபெறுவதற்கு பதிலாக அங்கு போர் மட்டுமே நடந்து வருவதாக அவர் தெரிவித்தார்.