மைத்திரிக்கும் சம்பந்தனுக்கும் அக்கினிப்பரீட்சையான "வற்" வரி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மக் கள் மீது அதிக சுமையை செலுத்தும் "வற்" வரிவிதிப்பை அனுமதிக்கப்போவதில்லை என தெரிவித்துள்ளார். அவ்வாறாயின் அவரின் தலைமைத்துவத்தின் கீழ் இருக்கும்சுதந்திர கட்சியினரும் "வற்" வரிவிதிப்புக்கு ஆதரவாக கையுயர்த்த கூடாதென பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
அதேநேரம் "வற்" வரி விதிப்பு தொடர்பிலான வாக்கெடுப்பின் போது எதிர்கட்சியும் மக்களின் நலன் கருதி அரசாங்கத்திற்கு சார்பாக வாக்களிக்க கூடாது. எனவே ஜனாதிபதிக்கு எதிர்ட்சி தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இது ஒரு அக்கினி பரீட்சையாகவே அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பிடகோட்டே பாகொடையில் அமைந்துள்ள தூய்மையான ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"வற்" வரி விதிப்பு தொடர்பில் உயர் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடை உத்தரவிற்கமைவாக அது தொடர்பிலான சட்ட மூலம் பாராளுமன்றத்தில் விவாத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அதன்படி அமைச்சரவையின் அனுமதியை பெற்றுக்கொண்டு வரிவிதிப்பை அமுல்படுத்துமாறு நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவையில் ஆற்றிய உரையொன்றில் தான் மக்களை நெருக்கடியில் தள்ளிவிடும் வகையிலான வரிவிதிப்புக்களை அனுமதிக்க போவதில்லை என அழுத்தமாக தெரிவித்திருந்தார். அதனால் அவரின் தலைமத்துவத்தின் கீழ் செயற்படும் அரச தரப்பில் உள்ள சுதந்திர கட்சி உறுப்பினர்கள் சகலரும் "வற்" வரி சட்டமூலத்திற்கு எதிராகவே கையுயர்த்த வேண்டும். அத்துடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழு இதற்கு ஆதரவளிப்பது ஆச்சரியமில்லை. அதனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு இது ஒரு அக்னி பரீட்சையாக அமையப்போகின்றது.
தற்போது எதிர்கட்சியாக உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பும் இந்த விடயத்தில் நெருக்கடியை சந்திக்க போகின்றது. இந்த எதிர்க்கட்சி அரசாங்கத்திற்கு எதிரானதாயின் வற் வரி திருத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும். இல்லாவிட்டால் அரசாங்கத்திற்கு சார்பான எதிர்கட்சி என்றால் ஆதரவாக வாக்களிக்க வேண்டும். எனவே கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இது ஒரு அக்னி பரீட்சையாகவே அமையும்.
அரசாங்கம் இதுவரையில் "வற்" வரிவிதிப்பில் உள்ள சிக்கலை அறியாமலேயே உள்ளது. "வற்"வரி விதிப்பு தொடர்பில் வினவினால் அரசாங்க தரப்பு அமைச்சர்கள் கடந்த ராஜபக்ஷ ஆட்சியில் 20 வீதம் "வற்" வரி விதிப்பு இருந்தது என்பதை சுட்டிக்காட்டி அதனூடாக மக்களை திசை திருப்ப முற்படுகின்றனர். ஆனால் இங்கு 15 வீதத்திலான வற் வரி விதிப்பு என்பது சிக்கலான விடயமல்ல. ஆனால் வரி விதிப்பிற்கு ஆட்படும் பரப்பினை விஸதரித்துள்ளமையே அதில் உள்ள சிக்கல் நிலை என்பது அமைச்சர்களுக்கு புரியாமல் இருப்பது வருந்தற்குரியது.
அதேநேரம் இந்த வற் வரி சுகாதார துறையின் மீது விதிக்கப்பட்டமையானது கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. வேலைவாய்யுக்களை பெற்றுக்கொண்டு அதிக வருமானம் ஈட்டுபவர்களை விடவும் சேவையிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் அதிகம் வைத்தியசாலைகளை நாடுகின்றனர். எனவே அவர்கள் மீது அதிக சுமையை சுமத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றார்.