மஹிந்தவை கைது செய்ய நடவடிக்கை!
இத்தாலி உட்பட ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்ப ட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஐரோப்பிய நாடு ஒன்றில் வைத்தே மஹிந்தவை கைது செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னர் ஆட்சியில் இருந்த போதே, ஐரோப்பிய நாடுகளுக்கு மஹிந்த விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது ராஜதந்திர சிறப்பு சலுகை அடிப்படையில் அவர் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்பு இல்லாமல் போயிருந்தன.
இந்நிலையில் போர்க்குற்றம் சுமத்தப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினராக விஜயம் செய்யும் மஹிந்தவை கைதுசெய்வது இலகுவான விடயம் என தெரிவிக்கப்படுகிறது.
இறுதியாக மஹிந்த பிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது, ஸ்காட்லாந்து யார்ட் பொலிஸாரின் ஆலோசனைக்கமைய அவரும், அவரின் பாதுகாப்பு குழுவினரும் யாருக்கு அறிவிக்காமல் மீண்டும் இலங்கைக்கு திரும்பிவிட்டனர்.
புலம்பெயர் தமிழ் அமைப்புகளால் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் மஹிந்த ராஜபக்ச உட்பட இராணுவ அதிகாரிகளை கைது செய்வதற்காக பிடியாணை கோரியிருந்தமையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் அன்றைய தினம் குற்றவாளிகள் அந்த நீதிமன்ற அதிகார வரம்பிற்கு அப்பால் இருந்தமையனால் பிடியாணை பிறப்பிக்கப்படவில்லை. எனினும் வழக்கு முறைப்பாடு செய்த தரப்பினர் முறைப்பாட்டை மீளவும் பெற்றுக் கொள்ளாமையினால் அது தற்போது வரையில் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளது.
ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் முறைப்பாட்டாளர்கள் இவர்களை கைது செய்வதற்கு பிடியாணை பிறப்பிக்குமாறு மீண்டும் கோரினால் அந்த உத்தரவை பிறப்பிப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.
பிரித்தானிய நீதிமன்றினால் வெளியிடும் கைது செய்வதற்கான பிடியாணையை செயற்படுத்துவதற்கு ஐரோப்பிய சங்கம் கைகோர்த்துள்ளமையினால் மஹிந்த ராஜபக்சவின் நிலைமை கவலைக்கிடமாகியுள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில் இத்தாலிக்கு விஜயம் மேற்கொள்ளும் மஹிந்த பெருமளவு பணத்தை தம்வசம் கொண்டு செல்வதாகவும், கைது செய்யப்படும் பட்சத்தில் அது சட்டத்தரணிகளின் செலவுக்கு பயன்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது.