தமிழ் அரசியல் கைதிகள் இன்று மீண்டும் உண்ணாவிரதம்
தம்மை விடுவிக்கக் கோரி தமிழ் அரசியல் கைதிகள், இன்று மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். அரசியல் காரணங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமது விடுதலையை விரைவுபடுத்தக் கோரி, அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
வெலிக்கடைச் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளும், இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக இன்று உண்ணாவிரதத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
அதேவேளை, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு முன்பாக, இன்று போராட்டம் ஒன்றை நடத்த அரசியல்கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பு திட்டமிட்டுள்ளது.
இதனிடையே, அரசியல் கைதிகளின் விடுதலையைத் துரிதப்படுத்துமாறு, சிறிலங்கா அதிபருக்கு அழுத்தம் கொடுக்குமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு, அனுராதபுர சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.