பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படாமை துரதிர்ஷ்டமே!
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது என பல வாக்குறுதிகளை சர்வதேசத்திற்கு உறுதியளித்துள்ள போதும் அதனை நிறைவேற்றாது பின்வாங்கி செல்வது துரதிர்ஷ்டமே என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்.நகரில் நேற்று நடத்தப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பல தடவைகள் அரசாங்கத்தால் எமக்கு உறுதிமொழி வழங்கப்பட்டபோதும் அந்த உறுதிமொழிகள் பல மாதங்கள் கடந்தும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் இன்னமும் சிறையில் வாடிக் கொண்டிருக்கின்றனர். உண்மையிலேயே நல்லிணக்கத்தைத் தற்போதைய அரசாங்கம் வெளிப்படுத்துகிறது என்றால் அவர்கள் அனைவரும் எந்தவித நிபந்தனைகளுமின்றி உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். அதன் மூலம் தான் அரசாங்கத்தின் உண்மையான நல்லிணக்கத்தை எமது மக்களுக்கு உணர்த்த முடியும். ஆகவே, அரசியல் கைதிகள் விடுவிக்கப்படும் வரை எமதுமக்களின் போராட்டம் தொடரும் எனத் தெரிவித்தார்.