Breaking News

உடலில் குண்டுத் துகள்களுடன் 410 பேர் விபரங்களை சபையில் சமர்ப்பித்தது கூட்டமைப்பு



உடலில் குண்டுத்துகள்­க­ளுடன் ஆபத்­தான நிலையில் யாழ்.மற்றும் வவு­னியா மாவட்­டத்தில் வாழ்ந்து வரும் 410 பேரின் பெயர் விப­ரங்­களை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு சபையில் சமர்ப்­பித்தது.

இந்தப் பட்­டி­யலில் 132 பேர் பாட­சாலை மாண­வர்­க­ளாக உள்­ள­தா­கவும் கூட்­ட­மைப்பு சபையில் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. யுத்தத்தில் மோச­மாக பாதிக்­கப்­பட்ட முல்­லைத்­தீவு,

கிளி­நொச்சி மற்றும் மன்னார் மாவட்­டங்­களின் இவ்­வாறு ஆபத்­தான நிலையில் பலர் காணப்­ப­டு­கின்­ற­ நிலையில் அவர்­க­ளது விப­ரங்­களை வழங்­கு­வ­தற்கு அந்­தந்த மாவட்­டங்­களின் அர­சாங்க அதி­பர்கள் இழுத்­த­டிப்­புக்­களை செய்து வரு­வ­தா­கவும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு சபையின் கவ­னத்­திற்கு கொண்டு வந்­துள்­ளது.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று விலங்­குத்­தீனி (திருத்தச்) சட்­ட­மூலம் மீதான விவாதம் இடம்­பெற்­றது. இதில் கலந்து கொண்டு உரை­யாற்றுகையிலேயே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­சக்தி ஆனந்தன் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவ­ரு­டைய உரையில் மேலும் தெரி­வித்­த­தா­வது,

கடந்த ஜூலை மாதம் எட்டாம் திகதி பாரா­ளு­மன்றில் பிர­த­ம­ரி­டத்­தி­லான நேரடி கேள்வி நேரத்தின் போது வடக்கு கிழக்கில் இடம்­பெற்ற யுத்­தத்தின் போது குண்டு மற்றும் ஷெல் வீச்­சுக்­களால் பாதிப்­ப­டைந்து அவற்றின் துகள்­க­ளுடன் ஆபத்­தான நிலையில் பாட­சாலை மாண­வர்கள், இளைஞர், யுவ­திகள் உள்­ளிட்ட பல தரப்­பட்­ட­வர்கள் காணப்­ப­டு­கின்­றார்கள். அவர்­க­ளுக்கு சத்­தி­ர­சி­கிச்சை வழங்­கு­வ­தற்கு உரிய நட­வ­டிக்கை உடன் எடுக்­கப்­பட வேண்­டு­மென கோரிக்கை விடுத்­தி­ருந்தேன். அச்­ச­ம­யத்தில் விப­ரங்­களை வழங்­கு­மாறு பிர­தமர் கூறி­யி­ருந்­த­தோடு மீள்­கு­டி­யேற்ற அமைச்சர் சுகா­தார அமைச்சர் ஆகி­யோ­ருடன் கலந்­தா­லோ­சித்து உள்­நாட்டில் காணப்­படும் அரச வைத்­தி­ய­சா­லை­களில் சிகிச்­சை­ய­ளிப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­மென பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உறு­தி­ய­ளித்­தி­ருந்தார். அத்­தோடு தேவை­யேற்­படின் வெளி­நாட்டு மருத்­துவ சிகிச்­சை­க­ளையும் வழங்­கு­வ­தற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் ஆலோ­சித்து நட­வ­டிக்கை எடுப்­ப­தா­கவும் கூறி­யி­ருந்தார். 

அதன் பிர­காரம் நான் வடக்கு மாகா­ணத்தின் ஐந்து மாவட்ட அர­சாங்க அதி­பர்­க­ளுக்கு கடிதம் மூலம் விப­ரங்­களை வழங்­கு­மாறு கோரி­யி­ருந்தேன். 65 நாட்­க­ளா­கி­விட்­டன. வெறு­மனே இரண்டு மாவட்ட அர­சாங்க அதி­பர்­களே அந்த தக­வல்­களை வழங்­கி­யுள்­ளனர். அத­ன­டிப்­ப­டையில் யாழ்.மற்றும் வவு­னியா மாவட்­டத்­தினைச் சேர்ந்த 410 பேர் இவ்­வாறு குண்டு துகள்­க­ளுடன் ஆபத்­தான நிலையில் உள்­ளனர். இவர்­களில் 132 பேர் பாட­சாலை மாண­வர்­க­ளாக உள்­ளனர். அதி­க­ள­வானோர் இளம் வய­தினைக் கொண்­டி­ருக்­கின்­றனர். இவர்­க­ளுக்கு உட­னடிச் சிகிச்­சைகள் அவ­சி­ய­மா­கின்­றன. ஆகவே இந்­தப்­பட்­டி­யலின் பிர­காரம் உட­னடி நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் எடுக்க வேண்டும்.

அதே­நேரம் கிளி­நொச்சி, மன்னார், முல்­லைத்­தீவு ஆகிய மாவட்­டங்­களைச் சேர்ந்த அரச அதி­பர்கள் இந்த விப­ரங்­களை வழங்­கு­வ­தற்கு பின்­நிற்­கின்­றனர், அச்­சப்­ப­டு­கின்­றனர். நல்­லாட்­சி­யிலும் மக்­க­ளுக்­கான சேவை­யாற்­று­வ­தற்கு நிய­மிக்­கப்­பட்­டுள்ள அரச அதி­கா­ரிகள் இவ்­வாறு அச்­சப்­பட்டு பின்­னிப்­ப­தற்­கான காரணம் என்ன? 65 நாட்கள் கடந்த நிலையில் அவர்கள் ஆகக்­கு­றைந்­தது எனது கோரிக்கைக் கடிதம் கிடைத்­தது என்­ப­தற்கு கூட பதி­ல­ளிக்­க­வில்லை என்­பது மிகவும் கவ­லை­ய­ளிக்கும் விட­ய­மாகும்.

அவ்­வா­றி­ருக்­கையில் தற்­போது என்னால் சமர்ப்­பிக்­கப்­பட்ட இந்த முதற்­பட்­டி­யலில் கூறப்­பட்­டுள்­ள­வர்­களின் விப­ரங்­க­ளுக்கு ஏற்ப அர­சாங்கம் உடன் நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்டும். கடந்த 2012 ஆம் ஆண்டு முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்­சிக்­கா­லத்தில் இந்த விடயம் சுட்­டிக்­காட்­டப்­பட்­ட­போது விப­ரங்கள் கோரப்­பட்­டி­ருந்­தன. அச்­ச­ம­யத்­திலும் விப­ரங்கள் என்னால் கைய­ளிக்­கப்­பட்­டி­ருந்­தன. ஆனால் அது தொடர்பில் எவ்­வி­த­மான நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­ப­ட­வில்லை. அது­போன்று தற்­போதே ஆட்­சி­யா­ளர்­களும் செயற்­பட வேண்டாம் என கோரிக்கை விடுக்­கின்­றனர்.

காணாமல் போனோர் பற்­றிய அலு­வ­லகம்

காணாமல் போனோர் பற்­றிய அலு­வ­லகம் இரா­ணு­வத்­தையோ பொலி­ஸா­ரையோ விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தாது என ஜனா­தி­ப­தியும் வெளி­வி­வ­கார அமைச்­சரும் கூறி­யுள்­ளனர். அவ்­வா­றாயின் அந்த அலு­வ­ல­கத்தால் எந்த நியாயம் எமது மக்­க­ளுக்கு வழங்­கப்­படும் என எதிர்­பார்க்க முடியும். புதிய கட்­சி­யொன்றை முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜபக் ஷ ஆரம்­பித்தால் அவ­ரு­டைய இர­க­சி­யங்கள் வெளி­யி­டப்­ப­டு­மென ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால எச்­ச­ரித்­துள்ளார்.

ஆனால் அவர்­க­ளு­டைய ஆட்சிக் காலத்­தி­லேயே போர்க்­குற்­றங்கள் இடம்­பெற்­றுள்­ளன. அது­தொ­டர்பில் உள்­ளக விசா­ரணை செய்­யப்­படும் என்றே அர­சாங்கம் கூறி வரு­கின்­றது. இவ்­வாறு முன்னாள் ஆட்­சி­யா­ளர்­களின் இர­க­சி­யங்­களை கையில் வைத்துக் கொண்டு அவர்­களை பாது­காத்துக் கொண்­டி­ருக்கும் தற்­போ­தைய ஆட்­சி­யா­ளர்கள் எவ்­வாறு உள்­ளக விசா­ர­ணையை நீதி­யான முறையில் முன்­னெ­டுக்க முடியும் என்ற கேள்விக் யெழுப்­பு­கின்­றது.

கடற்­ப­டைக்கு அதி­காரம் எங்­கி­ருந்து வந்­தது 1985 ஆம் ஆண்டு முன்னாள் ஜனா­தி­பதி ரண­சிங்க பிரே­ம­தாஸ மன்னார் பள்­ளி­மு­னையில் உள்ள 25 குரு­மார்­க­ளுக்கு வழங்­கிய காணியை கடற்­ப­டை­யினர் சுவீ­க­ரிக்க முயற்­சிகள் எடுத்துள்ளனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறே முன்னாள் ஜனாதிபதி ஒருவரால் கையகப்படு்த்தப்பட்ட காணியாகவும் மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில் தற்போது மன்னாரில் உள்ள கடற்படையினர் அந்தக் காணிகளை சுவீகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். 

இந்த அதிகாரத்தை வழங்கியவர்கள் யார்? கோப்புலவு, சம்பூர், வலிவடக்கு போன்ற பல பகுதிகளில் இராணுவம் தொடர்ந்து தன்னை நிலைநிறுத்துவதற்கு பொதுமக்கள் காணிகளை கையகப்படுத்தும் நிலையில் இவ்வாறு காணிகளை சுவீகரிப்பதற்கு முயற்சிகளை எடுத்து வருகின்றமை கண்டிக்கத்தக்கது என்றார்.