ஸ்ரீ ல.சு.க. இரண்டாகியுள்ளது- மஹிந்த அறிக்கை
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சக்தி மிக்க தூண்களாகவுள்ள தொகுதி அமைப்பாளர்களை பதவியிலிருந்து நீக்கியுள்ளமையானது கட்சியை உடைக்கும் ஒரு நடவடிக்கை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் போஷகரான மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள விசேட அறிக்கையொன்றிலேயே இதனைக் கூறியுள்ளார்.
இந்த அமைப்பாளர் பதவி பறிப்பினால் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தற்பொழுதே இரண்டாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு அமைப்பாளர்களை நீக்கியமையானது, கூட்டு எதிர்க் கட்சியுடன் இணைந்துள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினரை அங்கீகரிக்கும் மற்றுமொரு நடவடிக்கையாகவே மஹிந்த ராஜபக்ஷ கோடிட்டுக் காட்டியுள்ளார்.
கட்சியிலுள்ள பாரிய மக்கள் ஆதரவுள்ள அமைப்பாளர்களை நீக்கிவிட்டு, மக்கள் ஆதரவற்றவர்களை அப்பதவிக்கு நியமிக்கப்பட்டமையானது கட்சியை பலவீனப்படுத்தும் ஒரு நடவடிக்கையாகும். இது ஐக்கிய தேசியக் கட்சிக்கு மிகவும் ஒரு சாதகமான சூழலை ஏற்படுத்தும் எனவும் மஹிந்த ராஜபக்ஷ குறித்த அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளார்.