Breaking News

அரசியல் கைதிகள் விவகாரம்;விசேட அறிவிப்பிற்கு தயாராகிறார் சம்பந்தன்



மூன்றாவது முறையாக விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் விசேட கூற்று ஒன்றை வெளியிடவுள்ளார்.

நிலையியற் கட்டளைச் சட்டத்தின் 23இன் கீழ் 2 படி நாடாளுமன்றத்தில் நாளை வெள்ளிக்கிழமை இரா. சம்பந்தன் இந்த விசேட கூற்றை விடுக்கவுள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக தடுப்பில் வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூன்றாவது முறையாகவும் கடந்த 8ஆம் திகதியிலிருந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த வருடம் இதேபோன்ற உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனும் வழங்கிய வாக்குறுதியை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

எனினும் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்று சுட்டிக்காட்டி கைதிகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டதன் பின்னர் தடுப்பிலிருந்தவர்களில் சிலருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டு, பிணையும் வழங்கப்பட்டது. எவ்வாறாயினும் ஏனையவர்களின் நிலை தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தங்களது விடுதலையை வலியுறுத்தி மீண்டும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.