Breaking News

செம்மரக்கடத்தல் தொடர்பாக கைதான 32 தமிழர்களை விடுவிக்க முடியாது

செம்மரக் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 32 தமிழர்களை விடுவிக்க முடியாது என ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

சித்தூர் வனப்பகுதியில் உள்ள செம்மரங்களை வெட்ட வந்ததாக கூறி, சென்னை, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த 32 தமிழர்களை ஆந்திர போலீசார் கைது செய்து சித்தூர் சிறையில் அடைத்துள்ளனர். அவர் கள் மீது ஆந்திர மாநில போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக் குப்பதிவு செய்துள்ளனர். 

இந்தநிலையில் கைதான 32 தமிழர்களும் அப்பாவிகள், அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று முதல்- அமைச்சர் ஜெயலலிதா, ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு கோரிக்கை விடுத்தார். அது மட்டுமின்றி 32 தமிழர்கள் கைது விவகாரத்தை பாராளுமன்றத்திலும் அ.தி.மு.க. எழுப்பியது. மேலும் 32 தமிழர்களை மீட்பதற்கு உதவும் வகையில் 2 வக்கீல்களையும் நியமனம் செய்து முதல்- அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். 

இந்தநிலையில் சித்தூர் சிறையில் உள்ள தமிழர்கள் 32 பேரையும் விடுதலை செய்ய முடியாது என ஆந்திர முதல்- மந்திரி சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். குப்பம் பகுதிக்கு வந்திருந்த அவர் இதுதொடர்பாக நிருபர்களிடம் கூறியதாவது:-

சித்தூர் மாவட்டத்தில் விலை மதிப்புமிக்க செம்மரங்கள் தொடர்ந்து வெட்டி கடத்தப்படுகின்றன. அதை அனுமதிக்க இயலாது. கைதான தமிழர்கள் 32 பேரும் அப்பாவிகள் இல்லை. அவர்கள் நல்லவர்கள் என்று யாரும் நியாயப்படுத்த முடியாது. செம்மரம் கடத்துபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 32 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை விடுதலை செய்ய இயலாது.

இதுபற்றி ஆந்திர அரசு, தமிழக அரசுக்கு உரிய விளக்கத்தை அளிக்கும். செம்மரக் கடத்தல்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு சந்திரபாபுநாயுடு கூறினார்.