வடமாகாண அமைச்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்க மூவர் குழு
வடக்கு மாகாணசபையின் அமைச்சர்களுக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு, மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்திருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.பொதுநூலக கேட்போர் கூடத்தில் நேற்றுக்காலை நடந்த தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்துக்குப் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
இந்தக் குழுவில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் இருவரும், ஓய்வுபெற்ற அரசாங்க அதிபர் ஒருவரும் இடம்பெற்றுள்ளனர். இதுதொடர்பான பிரேரணை வடக்கு மாகாண சபையின் நாளை அமர்வில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
”வடக்கு மாகாண அமைச்சர்களுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன. இதுபற்றிய முறைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் போதிய சான்றுகள் எவையும் இருக்கவில்லை
அண்மையில் சான்றுகளுடன் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே இதுகுறித்து விசாரணை நடத்துவதற்கு குழுவொன்றை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பின்னணிகள் மற்றும் தகைமைகளை ஆய்வு செய்த பின்னர் தான் நாம் அமைச்சர்களைத் தெரிவு செய்திருந்தோம்.
குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதால் மாத்திரம் அவர்களை நீக்கி விடமுடியாது. விசாரணைக் குழுவின் கருத்தை ஆராய்ந்து, இதுதொடர்பாக மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று தெரிவித்தார்.
இதற்கிடையே, அமைச்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் குழுவை அங்கீகரிக்கும் பிரேரணை வடக்கு மாகாணசபையின் நாளைய அமர்வில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அவை முதல்வர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
இந்த பிரேணை நிறைவேற்றப்பட்டால் மாத்திரமே, விசாரணைக் குழு அமைக்கப்படும். இதனை அங்கீகரிப்பது வடக்கு மாகாணசபையின் கையில் தான் உள்ளது.” என்றும் குறிப்பிட்டார்.