Breaking News

மீண்டும் போராட்டத்தில் குதித்தனர் பரவிப்பாஞ்சான் மக்கள்



இராணுவத்தின் கட்டுப்பாட்டில் காணப்படும் கிளிநொச்சி பரவிப்பாஞ்சானிலுள்ள மக்களுக்குச் சொந்தமான அனைத்துக் காணிகளையும் விடுவிக்குமாறு வலியுறுத்தி, பிரதேச மக்கள் இன்று (புதன்கிழமை) மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மக்களது காணிகளிலுள்ள இராணுவத்தை வெளியேற்றி, காணிகளை மீள கையளிக்குமாறு வலியுறுத்தி பிரதேச மக்கள் இதற்கு முன்னர் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். இதற்கு தீர்வாக பிரதேசத்தின் ஒரு பகுதி காணியை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கடந்த மாதம் உறுதியளித்திருந்தார்.

எனினும், ஏனைய காணிகளையும் விடுவித்து தமது சொந்த இடத்தில் குடியேறுவதற்கு வழிசெய்ய வேண்டுமென வலியுறுத்தியே பிரதேச மக்கள் இன்றைய தினம் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பல வருட காலமாக வாடகை வீடுகளிலும், உறவினர் வீடுகளிலும் தங்கி பல சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக தெரிவிக்கும் பரவிப்பாஞ்சான் மக்கள், இபபிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள், அங்குள்ள இராணுவ உயர் அதிகாரியை சந்திப்பதற்கென காத்திருப்பதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.