தமிழ் மக்களின் அனுமதியின்றி விஹாரை அமைப்பது தவறு : விமலகனா தேரர்
இந்துக் கோயில்களுக்கு அருகில் பௌத்த விஹாரைகளை அமைப்பது தவறில்லையென்றும், எனினும் அது உரிய அனுமதியின்றி அமைக்கப்படுவது தவறென்றும் பேலியகொட கங்காராம விஹாரையின் மதகுருவான விமலகனா தேரர் குறிப்பிட்டுள்ளார்.
கம்போடியாவைச் சேர்ந்த மதகுரு லெச் சொனான் சகிதம் நேற்று (செவ்வாய்க்கிழமை) கிளிநொச்சி பொன்னகர் பிரதேசத்திற்குச் சென்றிருந்த குறித்த மதகுருவிடம், கிளிநொச்சி கனகாம்பிகை கோயிலுக்கு அருகில் பௌத்த விஹாரையொன்று அமைக்கப்பட்டு வருவது குறித்து ஊடகவியலாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளிக்கும்போதே விமலகனா தேரர் மேற்குறித்தவாறு குறிப்பிட்டார்.
ஆலய நிர்வாகத்தினரின் அனுமதியின்றியோ அல்லது அப்பிரதேச மக்களின் விருப்பத்திற்கு மாறாகவோ கனகாம்பிகை ஆலயத்திற்கு அருகில் பௌத்த விஹாரை அமைக்கப்படுமாயின், அது பௌத்த ஆகமத்திற்கு முரணானதென குறிப்பிட்ட விமலகனா தேரர், குறித்த விஹாரை அமைப்பு தொடர்பில் கிளிநொச்சியில் உள்ள பௌத்த மதகுருவுடன் உரையாடி தீர்மானிக்க வேண்டுமென குறிப்பிட்டார்.