அடுத்தவாரம் யாழ்ப்பாணம் செல்கிறார் ஐ.நா பொதுச்செயலர்
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்தி விவகாரங்களில் கவனம் செலுத்தவுள்ளதுடன், யாழ்ப்பாணத்துக்கும் சென்று பார்வையிடவுள்ளார்.
ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக், நியூயோர்க்கில் இந்தத் தகவலை நேற்று வெளியிட்டுள்ளார்.
ஆசிய நாடுகளுக்கான பயணத்தை ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் வரும் செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கவுள்ளார்.
முதலில் மியான்மர் செல்லும் அவர் அங்கிருந்து புதன்கிழமை பிற்பொழுதில் சிறிலங்காவுக்கான பயணத்தை ஆரம்பிப்பார்.
கொழும்பில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ள ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், கொழும்பில் ஐ.நாவின் பூகோள அபிவிருத்தி அடைவுகள் என்ற தொனிப் பொருளில் உரை நிகழ்த்தவுள்ளார்.
சிறிலங்கா பயணத்தின் போது. அமைதியை ஊக்குவித்தல் மற்றும் சமூகங்களிடையே அபிவிருத்தியை ஏற்படுத்தும் விடயத்தில் கவனம் செலுத்துவார்.
யாழ்ப்பாணத்துக்குச் செல்லும் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், அங்கு இடம்பெயர்ந்து மீளக்குடியேற்றப்பட்ட மக்களையும் சந்தித்துக் கலந்துரையாடுவார்.
அத்துடன், காலியில் நடக்கும் இளைஞர் நல்லிணக்க மாநாட்டிலும் பான் கீ மூன் உரையாற்றவுள்ளார்.