Breaking News

இலங்கையில் காணாமல் போனோருக்கான அலுவலக சட்டம்: செயலணி ஏமாற்றம்



இலங்கையில் கூட்டு எதிர்க்கட்சியினரின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில், காணாமல் போனோருக்கான அலுவலக சட்டத்திற்கு சபாநாயகர் அங்கீகாரம் அளித்துள்ள போதிலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பரிந்துரைகளை கவனத்தில் கொள்ளத் தவறியிருப்பது, ஏமாற்றமளிப்பதாக உள்ளது என நல்லிணக்கப் பொறிமுறைக்கான பொதுமக்கள் கலந்தாலோசனைச் செயலணி தெரிவித்துள்ளது.

நல்லிணக்கப் பொறி முறையில், நீதி வழங்குதல், பொறுப்பு கூறல், ஈடு செய்தல், உண்மையைக் கண்டறிதல், இழப்பீடு வழங்குதல் ஆகிய நான்கு அம்சங்களைச் செயற்படுத்துவதில், காணாமல் போனோருக்கான அலுவலகத்தை அமைப்பதற்கான சட்டமூலம் கொண்டு வரப்படுவது நம்பிக்கை தரத்தக்க ஆரம்பம் என அந்த செயலணி வர்ணித்துள்ளது.

எனினும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் கருத்துக்களை உள்ளடக்கி அந்தச் சட்டத்தை அரசு மெருகூட்டிய போதிலும், அந்த குடும்பங்களின் பரிந்துரைகளைக் கொண்ட தனது இடைக்கால அறிக்கையை அரசு கவனத்தில் எடுக்காமல் விட்டுவிட்டது என அந்தச் செயலணி சுட்டிக்காட்டியுள்ளது.

அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையைக் தட்டியெழுப்பவும், அதனை உறுதிப்படுத்தவும் நல்லிணக்கப் பொறிமுறையை நிறுவும்போது பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்கள், பரிந்துரைகளை உள்ளடக்குதல் அவசியமானதாகும்;இது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

அவ்வாறு உள்ளடக்கப்படாமல் விட்டால், பாதிக்கப்பட்ட மக்களின் குரல்கள் கேட்கப்படுவதற்காக அரசாங்கத்தினர் ஏற்படுத்தப்பட்ட இந்த வரலாற்றுச் சந்தர்ப்பம் கை நழுவிப் போய்விடும் என்று பொதுமக்கள் கலந்தாலோசனைச் செயலணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.