Breaking News

வாழும் போராளிகளை காப்பாற்ற வேண்டும்: யேர்மனில் கவனயீர்ப்பு போராட்டம்



ஸ்ரீலங்கா இராணுவத்திடம் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகளின் மர்ம மரணங்களைக் கண்டித்தும்! சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் யேர்மன் பேர்லின் நகரிலுள்ள வெளிவிவகார அமைச்சுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த கவனயீர்ப்பு போராட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை 18 ஆம் திகதி மாலை 16:30 அளவில் நடைபெறவுள்ளது. 

விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து சரணடைந்த பின்னர், புனர்வாழ்வு பெற்று விடுதலை செய்யப்பட்டு, இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய போராளிகள் பலர் அண்மைக் காலமாக பல வகைப்பட்ட நோய்களினால் உயிரிழந்துள்ளனர். இதுவரையிலும் 107 க்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்களில் பெரும்பாலானவர்கள் புற்றுநோயினால் பாதிப்படைந்தே உயிரிழந்துள்ளார்.

கொன்று அழிக்கும் பேரினவாதத்தின் மறைமுக யுத்தத்தினை அம்பலப்படுத்தவும், யேர்மன் வெளிவிவகார அமைச்சுக்கு இதன் பயங்கரவாதத்தை எடுத்துச் சொல்லவுமே இவ்வாறு ஒன்றுகூடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. போராளிகள் சிறைக்குள்ளும், வெளியேயும் சிதைக்கப்படும் கால கட்டத்தில், நமது போராட்ட குரல்களே அவர்களுக்கான நீதியை கொடுக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மௌனமாக அரங்கேறிக் கொண்டிருக்கும் உயிர்வதைகளை, உயிர்க்கொலைகளை நிறுத்த இந்த போராட்டங்கள் முக்கியம் என்பதை உணர்ந்து அனைவரும் ஒன்றுகூட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் விடுதலைக்காக தமது வாழ்வையே அர்ப்பணித்து போராடி இன்று பல்வேறு வடிவங்களில் துன்பப்படும் போராளிகளுக்காக குரல் கொடுக்க வாருங்கள் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வாழும் போராளிகளை காப்பாற்ற வேண்டும் என்றும் அழிக்கப்பட்ட எமது சரித்திரத்தில் எஞ்சியுள்ள சாட்சிகளும், சரித்திரமும் அவர்கள் மட்டுமே என்றும் கூறப்பட்டுள்ளது.