பாலம் அமைக்கும் தேசத்துரோகத்தை அரசாங்கம் செய்யாது – என்கிறார் ஜனாதிபதி
இந்தியா – சிறிலங்கா இடையில் பாலம் அமைக்கும் இந்தியாவின் திட்டத்துக்கு சிறிலங்கா இணங்கியிருப்பதாக வெளியாகும் தகவல்களில் எந்த உண்மையும் கிடையாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தலவத்துகொட கணேலந்த விகாரையில் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
“இந்தியா – சிறிலங்கா இடையில் பாலம் அமைக்கும் இந்தியாவின் திட்டத்துக்கு சிறிலங்கா இணங்கியிருப்பதாக, மகிந்த ராஜபக்ச அணியினர் கூறிவரும் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை.
தமிழ்நாடு தேர்தலின் போது சில இந்திய அரசியல்வாதிகள் செய்த பரப்புரையை அடிப்படையாகக் கொண்டே இந்தக் குற்றச்சாட்டுகளை அவர்கள் முன்வைக்கின்றனர்.
அத்தகையதொரு பாலம் அமைக்கப்படாது. அதுகுறித்த பேச்சுக்களும் நடத்தப்படவில்லை. பாலம் அமைக்கும் தேசத்துரோகச் செயலை சிறிலங்கா அரசாங்கம் ஒருபோதும் செய்யாது” என்றும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் பாலம் அமைப்பது தொடர்பாக இந்தியாவுடன் பேச்சுக்கள் எதுவும் நடத்தப்படவில்லை என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.