முன்னாள் போராளிகளின் மரணம் : வட மாகாண சபையிடம் அறிக்கை கோரும் அரசு
புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் திடீர் சுகயீனமுற்று மர்மமான முறையில் உயிரிழந்து வருகின்ற நிலையில், புனர்வாழ்வின் போது அவர்களுக்கு இரசாயன ஊசி ஏற்றப்பட்டமையே இதற்கு காரணம் என குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், முன்னாள் போராளிகள் குறித்த அறிக்கையொன்றை வட மாகாண சுகாதார அமைச்சிடம் அரசாங்கம் கோரியுள்ளது.
முன்னாள் போராளிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், குறித்த அறிக்கையின் பிரகாரம் உள்நாட்டில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுமென அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
உள்நாட்டு மருத்து பரிசோதனை வெற்றியளிக்காவிட்டால் சர்வதேச மருத்துவர்களை கொண்டு பரிசோதிப்பது குறித்து ஆராயப்படுமென அமைச்சர் ராஜித மேலும் தெரிவித்தார்.
எனினும், இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளோ மருத்துவ பரிசோதனைகளோ நம்பகத்தன்மை வாய்ந்ததாக அமையாதென குறிப்பிட்டுள்ள வட மாகாண சபை, சர்வதேசத்தின் உதவியை பெற்றுக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.