மஹிந்த அணி ஜனாதிபதிக்கு அவசர கடிதம்
காணாமல் போனோர் தொடர்பில் பணியகம் குறித்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு முன்னர் அதுதொடர்பில் உச்சநீதிமன்றத்தின் வியாக்கி யானத்தை பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக செயற்படும் கூட்டு எதிர்க்கட்சியினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
கூட்டு எதிர்க்கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன, அக்கட்சியின் உறுப்பினர்களான சமல் ராஜபக்ச, உதய கம்மன்பில, பந்துல குணவர்தன, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட 22 பேர் கையெழுத்திட்டு இந்தக் கடிதத்தை அனுப்பிவைத்துள்ளனர்.
காணாமல் போனோர் தொடர்பில் தனிப் பணியகம் அமைப்பதற்கு வழிவகைகளை செய்வதற்குரிய சட்டமூலம் இன்று வியாழக்கிழமை ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இந்த சட்டமூலம் மீதான விவாதம் இன்றும், நாளையும் இடம்பெறவிருப்பதோடு, நாளைய தினம் வாக்கெடுப்பும் நடத்தப்படவுள்ளது.
இந்த நிலையில் குறித்த சட்டமூலத்திலுள்ள சில விடயங்கள் ஸ்ரீலங்கா அரசியலமைப்பின் பல்வேறு பிரிவுகளுக்கு முரணான விதத்தில் காணப்படுவதாக கூட்டு எதிர்க்கட்சியினர் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் காணாமல் போனோர் பணியகம் அமைக்கப்பட்டால் அது தேசிய பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாகி விடும் என்பதுபோல, இதற்கு நாட்டிலுள்ள புத்திஜீவிகளும் கடும் எதிர்ப்பையே வெளிப்படுத்தி வருகின்றனர் என்றும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் அரசியலமைப்பிற்கு முரணான விடயங்களை உள்ளடக்கிய சட்டமூலம் தொடர்பில் உச்சநீதிமன்றத்தை நாடாமல் நாடாளுமன்றத்தில் அதனை நிறைவேற்றினால் அது தேசத்திற்கு இழைக்கப்படும் குற்றச் செயலாகவே கருதப்படும் என்று தெரிவித்துள்ள கூட்டு எதிர்க்கட்சியினர், அதனை நிறைவேற்றுவதற்கு முன்னதாக உச்சநீதிமன்ற வியாக்கியானத்தைப் பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.