தவறு செய்து விட்டோம்- புலம்பும் கம்மன்பில
காணாமற்போனோர் பணியகத்தை அமைக்கும் சட்டமூலத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யத் தவறி விட்டதாக, மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிரணி ஒப்புக்கொண்டுள்ளது.
காணாமற்போனோர் தொடர்பான பணியகத்தை உருவாக்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் இன்று விவாதிக்கப்படவுள்ளது.
இந்தநிலையில், கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட கூட்டு எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, இந்தச் சட்டமூலம் தொடர்பான கருத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உயர்நீதிமன்றத்திடம் கேட்க வேண்டும் என்று கோரினார்.
“காணாமற்போனோர் பணியகம் அரசியலமைப்புக்கு முரணான ஒரு மரணப் பொறி. இந்த சட்டமூலத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் சவால் விடுவதற்கு நாம் தவறிவிட்டோம். மதிப்புக்கூட்டு வரி திருத்தச்சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்தது போன்ற மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்க வேண்டும்.
நாம் தவறு செய்து விட்டோம். எனினும், இந்த சட்டமூலத்துக்கு சவால் விடுப்பதற்கு இப்போது எமக்கு ஒரே ஒரு வழி தான் இருக்கிறது.
அரசியலமைப்பின் 129அவது பிரிவின்,கீழ் காணாமற்போனோர் பணியகத்தின் சட்டபூர்வ நிலை குறித்து சிறிலங்கா அதிபரே உயர்நீதிமன்றத்தின் கருத்தை அறியலாம். அதனை அவர் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.