போராளிகளின் மர்ம மரணங்கள் – வெளிநாட்டு மருத்துவர்களைக் கொண்டு விசாரணை?
புனர்வாழ்வின் போதும், அதற்குப் பின்னரும் இடம்பெற்று வரும், முன்னாள் போராளிகளின் மர்ம மரணங்கள் தொடர்பாக வெளிநாட்டு மருத்துவர்களைக் கொண்டு விசாரணை செய்யப்பட வேண்டும் என்று வடக்கு மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணசபையின் 58 ஆவது அமர்வு நேற்று இடம்பெற்ற போது, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும், மாகாணசபை உறுப்பினர் ரவிகரனும் இணைந்து இந்த பிரேரணையை முன்வைத்தனர்.
புனர்வாழ்வின் போதும் அதற்குப் பின்னரும் முன்னாள் போராளிகள் திடீரென நோய்வாய்ப்பட்டு மரணமாவது குறித்து இந்தப் பிரேரணையில் கவனம் செலுத்தப்பட்டிருந்தது.
நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வு செயலணியிடம் சாட்சியமளித்த சில முன்னாள் போராளிகள், புனர்வாழ்வின் போது ஊசி ஏற்றப்பட்டதாகவும், அதன் பின்னர் தமது உடல்வலுக் குன்றியதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த விடயம் குறித்து விசாரணை நடத்தி உண்மையை வெளிக் கொண்டு வர வேண்டியது, வடக்கு மாகாணசபையின் பொறுப்பு என்று பிரேரணையை முன்வைத்து உரையாற்றிய முதலமைச்சர் குறிப்பிட்டார்.
இதையடுத்து, முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வுக்காலத்தில் இரசாயன ஊசி செலுத்தப்பட்டதா, உணவில் நச்சுப் பொருட்கள் கலக்கப்பட்டதா என்று வெளிநாட்டு மருத்துவர்களைக் கொண்டு விசாரணை நடத்தக் கோரும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த விசாரணைக்கு அனுமதி அளிக்குமாறு சிறிலங்கா அரசாங்கத்திடம் விரைவில் கோரவிருப்பதாக வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் தெரிவித்தார்.