அமெரிக்காவுடனான இராணுவ உறவுகளால் இலங்கைக்கு அச்சுறுத்தல் – திஸ்ஸ விதாரண
அமெரிக்கா- சிறிலங்கா இடையிலான இராணுவ உறவுகள் வளர்ச்சியடைந்து வருவது, சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புக்குக்கு பிரதான அச்சுறுத்தலாக இருக்கும் என்று லங்கா சமசமாசக் கட்சியின் ததலைவரும், முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,
“அமெரிக்கா- சிறிலங்கா இடையில் இராணுவ ஒத்துழைப்பு அதிகரித்து வருவதை அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
அமெரிக்காவுடனான இராணுவ உறவுகளை சிறிலங்கா தற்போதுள்ளது போல வளர்த்துக் கொண்டால், பிலிப்பைன்ஸ் போன்று, அமெரிக்காவின் பொம்மையாகத் தான் மாறவேண்டியிருக்கும்.
திருகோணமலைத் துறைமுகத்தைப் பயன்படுத்த அமெரிக்கக் கடற்படையின் 7ஆவது கப்பல்படைப் பிரிவுக்கு அனுமதித்ததன் மூலம் அரசாங்கம், சிறிலங்காவின் இறையாண்மையை விட்டுக் கொடுத்திருக்கிறது.
முழு இந்தியப் பெருங்கடலையும் பாதுகாக்குமாறு சிறிலங்கா கடற்படையிடம் அமெரிக்கா கேட்டிருக்கிறது.
சிறிலங்கா கடற்படை மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்தியிருந்தாலும், அதன் வளங்கள் மட்டுப்படுத்தப்பட்டவை.
இந்தியப் பெருங்கடல் பாதுகாப்பில் கவனம் செலுத்தும் போது, இந்திய மீனவர்களின் ஊடுருவல் உள்ளிட்ட இலங்கையின் கடல் எல்லைக்குள் நிலவும் பிரச்சினைகளை அவர்களால் கவனிக்க முடியாது.
சிறிலங்காவின் சிறிய கடற்படையிடம் பெரிய பொறுப்பை ஒப்படைக்கப்பட்டால், அமெரிக்க கப்பல்கள் தான் சிறிலங்காவில் நங்கூரமிடும்” என்றும் அவர் தெரிவித்தார்.