Breaking News

கண்டனப் பேரணிக்கு ஆதரவு தரவும்! - தமிழ் மக்கள் பேரவை



தமிழர் தேசத்தில் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை உருவாக்கும்பொருட்டு, புதிய சிங்களக் குடியேற்றங்களும், விகாரைகளும் மிக வேகமாக நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. 

தமிழர் தாயகத்தில் சகல மாவட்டங்களிலும் பெரிய சிறிய விகாரைகள் பல அமைக்கப்பட்டுவருவதுடன், வீதி முடக்குகள் மற்றும் சந்திகளிலும் புத்தர் சிலைகள் பிரதிஸ்ட்டை செய்யும் பணிகளும் நடைபெறுகின்றது. திருக்கேதீஸ்வரம் முகப்பில், கிளிநொச்சி கனகாம்பிகை அம்மன் கோவில் அருகில், திருக்கோணேஸ்வரர் கோவில் முகப்பில், கன்னியா வென்னீரூற்றில், சாம்பல் தீவில், மாங்குளம், கனகராயன்குளம், மற்றும் சேமமடு பகுதிகளில் பௌத்த விகாரைகளும் புத்தர் சிலை வைப்புக்களும் இடம்பெற்று வருவதுடன், தமிழ் மக்களின் கலாசார தலைநகராம் யாழ்ப்பாணத்தில் நைனை நாகபூசணி அம்மன் கோவிலுக்கு முன்பாக 67 அடி உயரமான புத்தர் சிலை ஒன்றை நிர்மாணிப்பதற்கும் கடற்படையினர் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்த் தேசத்தினுடைய மொழி, மத, கலாசாரங்களை அழிக்கின்ற (Cultural Genocide) ஒரு செயற்பாடாகவே நாம் இதனை கருதுகின்றோம்.

இதேபோல் புதிய புதிய சிங்களக் குடியேற்றங்களும் இராணுவக் குடியிருப்புக்களும் தமிழர் தாயகத்தின் சகல இடங்களிலும் உருவாக்கப்பட்டு வருகின்றன. கிழக்கு மாகாணத்தில் வெற்றிகரமாக பல தசாப்தங்களாக மேற்படி சிங்கள பௌத்த மயமாக்கல் வேலைகளை வெற்றிகரமாக முன்னெடுத்து வந்துள்ள நிலையில், தற்போது வடமாகாணத்திலும் இவ்வாறான புதிய சிங்கள குடியேற்றங்களும், இராணுவக் குடியிருப்பும், யுத்தத்திற்குப் பின்னர் உருவாக்கப்பட்டுள்ளன.

சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை உருவாக்கக் கூடிய இத்தகையை நடவடிக்கைகளை உடனடியாகத் தடுத்து நிறுத்துமாறும். 

தமிழ் மக்கள் முழுமையாக மீளக் குடியேறக்கூடிய வகையில் இராணுவம் ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவிக்குமாறும். 

தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து நிலை கொண்டுள்ள இராணுவத்தினரை வெளியேறுமாறும். 

தமிழின அழிப்பிற்கான பொறுப்புக் கூறலுக்காக ஒரு முழு அளவிலான சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணைப் பொறிமுறையை வலியுறுத்தியும். 

காணாமல் போகச் செய்யப்பட்டோர் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்

அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி உடனடியாக விடுவிக்குமாறும் அத்துடன் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கவும் கோருகின்றோம்.

தமிழ்த் தேசத்தின் பொருளாதாரம், கலாசாரம், மொழி என்பவற்றை அழித்தல், குடிப்பரம்பலை மாற்றியமைத்தல் போன்ற திட்டமிட்ட செயற்பாடுகள் ஒட்டு மொத்தமாக தடுத்துநிறுத்தப்படல் வேண்டும்.

இவ்வாறான சம்பவங்கள் முடிவின்றி மீண்டும் மீண்டும் நிகழும்போது அவற்றிற்கெதிராக சந்ததி சந்ததியாக போராடிக் கொண்டிருக்க வேண்டிய துரதிஸ்டவசமான நிலைக்கு எமது மக்கள் தள்ளப்படுகின்றனர். இந்நிலை மாற்றியமைக்கப்படல் வேண்டுமாயின் தமிழ்த் தேசத்தில் நடைபெறுகின்ற ஒவ்வொரு விடயத்தினையும் தீர்மானிக்கின்ற அரசியல் அதிகாரம் எம்மிடம் இருக்க வேண்டும்.

அவ்வாறான அரசியல் அதிகாரம் எம்மிடம் இருக்க வேண்டுமாயின் ஆகக் குறைந்தது சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் வடக்குஇ கிழக்கு இணைந்த தமிழ்த் தேசத்தின் இறைமையை அங்கீகரிக்கின்ற ஒர் சமஸ்டி ஆட்சி உருவாக்கப்பட வேண்டும்.

அவ்வாறன தீர்வை வழங்கக்கூடிய புதிய அரசியல் சாசனம் ஒன்றினை வலியுறுத்தியும் மேற்குறிப்பிட்ட கலாச்சார பண்பாட்டுச் சிதைப்புக்களை உடனடியாக நிறுத்த கோரியும் தமிழ் மக்கள் பேரவை ஏற்பாட்டில் 14-09-2016 அன்று பேரணி ஒன்றினை நடாத்த தீர்மானித்துள்ளோம்.

சர்வதேசத்தின் ஆதரவுடன் இலங்கை அரசாங்கம் இனப்பிரச்சனையை தீர்ப்பதாக கூறி அரசியலமைப்பை மாற்றவுள்ள இவ்வேளையில்-ஐ. நா கூட்டத்தொடர் ஆரம்பிக்கும் இவ்வேளையில், அதற்கு வலுச்சேர்க்குமுகமாக சர்வதேசத்திற்கும்இ இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஒருமித்த குரலில் உரக்கக்கூற தமிழர்களாகிய நாம், எந்த கட்சி பேதமின்றி ஒற்றுமையாய்இ ஒரு குரலில் எடுத்துக்கூறூவோமாக.

இதற்காக, இதே கோஷத்துடன் தேர்தலில் மக்கள் ஆணையை பெற்று தமிழ் மக்களின் பிரநிதிகளாக இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இக்காலத்தின் தேவையாகிய இப்பேரணிக்கு தங்கள் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் வேண்டி, எம்மக்களுடன் தோளுடன் தோள் நிற்குமாறு பகிரங்கமாக அழைத்து நிற்கின்றோம். 

குறிப்பாகஇ நாம் என்றும் தொடர்பில் இருக்கும் கொளரவ மாவை சேனாதிராஜா அவர்கள் தலைமை தாங்கும் தமிழரசுக் கட்சியையும், கொளரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் ரெலோ கட்சியையும், ஏற்கனவே எம்முடன் இணைந்து இப்பேரணியை எற்பாடு செய்யும் கட்சிகளான E.P.R.L.F, P.L.O.T.E மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னனி என்பவற்றுடன் இணைந்து ஒற்றுமையாய்இ ஒரே குரலில் தமிழ் மக்களின் குரலை ஒலிக்கச்செய்ய வரும்படி பகிரங்கமாகவும் மிகவும் அன்புரிமையுடனும் வேண்டி நிற்கின்றோம்.

இதன்மூலம் நாம் இனங்களுக்கிடையிலான உண்மையான ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்துவதுடன், ஒரு நீண்டகால நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தல் முடியும் என்பது ஒரு வெளிப்படை உண்மையே.

மேலும்இ அனைத்து தொழிற் சங்கங்கள், சமூக, சிவில் அமைப்புக்கள், விளையாட்டுக் கழகங்கள், சனசமூக நிலையங்கள், பெண்கள் அமைப்புக்கள், பல்கலைக்கழகச் சமூகம், தொழில் நுற்பக் கல்லூரிகள், தனியார் கல்வி நிலையங்கள், ஆசிரியர் சமூகம், மாணவர் சமூகம், தனியார் போக்குவரத்து சங்கங்கள், முச்சக்கர வண்டி சங்கங்கள், வர்த்தக சங்கங்கள், துறைசார் வல்லுணர்கள், மத அமைப்புக்கள், அரச ஊழியர்கள், அரச மற்றும், தனியார் வங்கி ஊழியர்கள், மீனவ சங்கங்கள், விவசாயிகள் அமைப்புக்கள், என அனைத்து அமைப்புக்களையும் மற்றும் அனைத்து தமிழ் மக்களையும் எம்முடன் இணைந்து ஒரே குரலில் ஒலிக்க கைகோர்க்கும்படி வேண்டி நிற்கின்றோம்.

நன்றி
செயற்குழு
தமிழ் மக்கள் பேரவை