எக்னெலிகொடவுக்கும் புலிகளுக்கும் தொடர்பு இல்லை..!!
கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவுக்கு, விடுதலைப் புலிகளுடன் எந்தத் தொடர்பும் இருந்திருக்கவில்லை என்று, தமது விசாரணை களில் தெரியவந்திருப்பதாக, சிறிலங்காவின் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
ஹோமகம நீதிமன்றத்தில் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமற்போகச் செய்யப்பட்டஇந்த வழக்கு நேற்று விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது குற்றப் புலனாய்வுத்துறை சார்பில் முன்னிலையான அதிகாரிகள், பிரகீத் எக்னெலிகொடவுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு இருந்திருக்கவில்லை என்றும், புலிகளிடம் இருந்து நிதியுதவி பெறவில்லை என்றும், தீவிரவாதச் செயற்பாடுகள் தொடர்பாக அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை காணப்படவில்லை என்றும் தமது விசாரணைகளின் மூலம் தெரியவந்திருப்பதாக நீதிவானின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர்.
பிரதி காவல்துறைமா அதிபர், சிறிலங்காவின் இராணுவ, கடற்படை, விமானப்படைத் தளபதிகளிடம் நடத்தப்பட்ட கலந்துரையாடல்களின் மூலம் இது தெரியவந்திருப்பதாகவும், அவர்கள் குறிப்பிட்டனர்.
எந்த தீவிரவாத செயற்பாடுகளிலும் எக்னெலிகொட தொடர்புபட்டதாக பதிவுகள் எதுவும் இருக்கவில்லை என்று முப்படைகளின் தளபதிகள் உறுதியாக தெரிவித்ததாகவும், குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள எட்டு இராணுவப் புலனாய்வு அதிகாரிகளையும், செப்ரெபம்பர் 6ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க ஹோமகம நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.