ஜனாதிபதி தன்னிடம் இருக்கும் இரகசியங்களை வெளியிட வேண்டும் - கம்மன்பில
பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர சட்டத்தை வளைத்து ஜனாதிபதியை உள்ளே தள்ளும் முன்னர், ஜனாதிபதி தன்னிடம் இருக்கும் இரகசியங்களை வெளியிட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
புதிதாக கட்சியை ஆரம்பித்தால், இரகசிங்களை வெளியிடுவார்களாம். தங்க குதிரைகள், லெம்போகினி, 18 பில்லியன் டொலர், ஹெலிக்கொப்டர் போன்ற விடயங்கள் ஏன் இன்னும் வெளிவரவில்லை என நாங்கள் எண்ணிக்கொண்டிருந்தோம்.
ஜனாதிபதி வேண்டும் என்றே இந்த இரகசியங்களை மறைத்து வைத்துள்ளார். நாங்கள் எண்ணியது போல் கட்சியை ஆரம்பிப்பதற்கும் திருட்டுகளை பிடிப்பதற்கும் இடையில் சம்பந்தமில்லை.
புதிய கட்சி தொடங்கினாலும் தொடங்காவிட்டாலும் தவறு செய்திருந்தால் தண்டனை வழங்க வேண்டும். ஜனாதிபதி என்ன சொல்ல வருகிறார்? தான் சொல்வது போல் நடந்து கொண்டால், கொள்ளைகள் பற்றிய இரகசியங்களை மறைப்பதாக கூறுகிறார்.
அப்படியானால் இது நல்லாட்சியா என நாங்கள் கேட்க நேரிடும். கூட்டு அரசாங்கத்தின் முதலாம் ஆண்டு நிறைவை கொண்டாட மாத்தறையில் நடத்தப்பட்ட கூட்டத்திற்கு போதுமான கூட்டம் வரவில்லை. இதனால், ஜனாதிபதிக்கு கோபம் வருவது நியாயமானது.
மேடையில் ஏறி மைதானத்தை பார்த்த போது கூட்டம் இருக்கவில்லை. மேடையில் பார்க்கும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் எவரும் வந்திருக்கவில்லை. நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேமஜயந்த, அனுர யாப்பா, ஜோன் செனவிரட்ன போன்ற சிரேஷ்ட அமைச்சர்கள் எவரும் வந்திருக்கவில்லை.
இதனால், ஜனாதிபதி மனரீதியாக பாதிக்கப்பட்டு கோபத்தில் பேசினார். இப்படி நடந்தால், எவருக்குத்தான மளஉளைச்சல் வராது? எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.