றியோ ஒலிம்பிக்: ஈழத்தமிழர் துளசி தர்மலிங்கம் அதிர்ச்சித் தோல்வி
றியோ ஒலிம்பிக் ஆண்களுக்கான குத்துச்சண்டைப் போட்டியில் கட்டார் சார்பில் பங்கேற்றிருந்த ஈழத்தமிழரான துளசி தர்மலிங்கம் அதிர்ச்சித் தோல்வியடைந்துள்ளார்.
64 கிலோ எடைப்பிரிவுக்காக நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற முதல்சுற்றுப் போட்டியில் மொங்கோலியா வீரர் Chinzorig Baatarsukh ஐ எதிர்கொண்ட துளசி தர்மலிங்கம் 3:0 என்ற புள்ளி அடிப்படையில் தோல்வியடைந்தார்.
இலங்கை புலோலியைச் சேர்ந்த இவர் உலகத்தரத்தில் நடைபெற்ற போட்டிகளில் இதுவரை காலிறுதிச் சுற்றை எட்டவில்லை எனினும், ஏழு முறை நகரச்சுற்று வட்டத்திலும், ஆறு முறை நிடர்சாக்சன் (Nidersachsen) மாநிலத்தில் சம்பியனாகவும், ஒரு தடவை ஜேர்மன் நாட்டின் சம்பியனாகவும் வந்திருக்கின்றார்.
கடந்த ஆண்டு வரை 120 குத்துச்சண்டை போட்டிகளில் விளையாடியுள்ள துளசி தர்மலிங்கம் இவற்றில் 75 போட்டிகளில் வெற்றியும் 6 போட்டிகளில் சமநிலையும் கண்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த ஜூலை 7 ஆம் திகதி நடைபெற்ற Light Welterweight மூன்று சுற்றுப் போட்டியில் ஆர்ஜென்ரினாவைச் சேர்ந்த கார்லோஸ் அக்கியுனோவை எதிர்த்து 3:0 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்றார் என்பதுடன் றியோ ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்கான தகுதியையும் பெற்றுக் கொண்டார்.
துளசி தர்மலிங்கம் தோல்வியடைந்த போதிலும் றியோ ஒலிம்பிக்கில் ஈழத்தமிழர் என்ற வகையில் பங்கேற்றிருந்தமை தமிழர்கள் அனைவருக்கும் பெருமையே.