நல்லாட்சி அரசை பாதுகாக்கும் தேவையுள்ளது- திகாம்பரம்
நல்லாட்சி அரசாங்கத்தை காப்பாற்ற வேண்டிய தேவை தமக்குள்ளதாக மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம்தெரிவித்தார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்திலேயே மக்கள் நிம்மதியுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நல்லாட்சி அரசின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு கொழும்பு புறக்கோட்டை புடவை வியாபாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற தமிழ் முற்போக்கு கூட்டணி பிரதிநிதிகளுக்கான நிகழ்வு நேற்று மாலை கொழும்பில் இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர் பழனி திகாம்பரம், நல்லாட்சி அரசாங்கத்தை பாதுகாத்து மக்களுக்கு சேவை செய்வதே தமது கடமையென தெரிவித்தார்.
அத்துடன் மக்களின் பிரச்சினைகளை அரசாங்கம் நிவர்த்தி செய்யாத பட்சத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு கிடைத்துள்ள மூன்று அமைச்சு பதவிகளையும் இராஜினாமா செய்ய தாம் தயாராகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் தமிழ் முற்போக்கு கூட்டணியை பிளவு படுத்தும் நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டுள்ளதாகவும் அதற்கு இடமளிக்க போவதில்லையெனவும் மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.