11 ஆயிரம் முன்னாள் போராளிகள் அழியும் அபாயம்..!!
அரசாங்கம் எமக்கு புனர்வாழ்வளிப்பதாகக்கூறி விஷமேற்றி பாரிய துரோகத்தை செய்து எம்மை நம்பவைத்து ஏமாற்றியுள்ளது. நாம் தினம் தினம் செத்துக்கொண்டிருக்கின்றோம். எனவே சர்வதேசமும் எமது தமிழ் அரசியல்வாதிகளும் விரைந்து துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என முன்னாள் போராளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே காரைதீவைச் சேர்ந்த முன்னாள் போராளியான சுப்பிரமணியம் தவமணி இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், நான் 2009.05.11இல் ஓமந்தையில் வைத்து இராணுவத்திடம் சரணடைந்தேன். பின்பு எம்மை வவுனியா பூந்தோட்ட முகாமிலும், செட்டிகுள முகாமிலும் தடுத்துவைத்தார்கள்.
அங்கெல்லாம் எமக்கு கோழி இறைச்சியே உணவாகத்தருவார்கள். ஒருநாள் மீன்தரப்படும். நாம் உணவு சமைப்போம். ஆனால் அவர்கள் இந்த உணவை ஒருநாளும் சாப்பிடமாட்டார்கள்.
பின்பு எம்மை பூசா முகாமிற்கு கொண்டுசென்று 11 மாதங்கள் தடுத்துவைத்தார்கள். பின்பு வவுனியா பூந்தோட்ட முகாமிற்கு கொண்டுவந்தனர். அங்கு நெருப்புக்காய்சலுக்கு தடுப்பூசி போடுவதாக தெரிவித்து ஊசிபோட்டார்கள்.
இந்தநிலையில் 2012.01.22 ஆம் திகதி எம்மை விடுதலை செய்தார்கள். விடுதலையானாலும் மாதமொருமுறையாவது சி.ஜ.டி.யினர் எம்மை விசாரிப்பார்கள். இதன்காரணமாக சமூகத்தின்பார்வை தப்பாகி விடுமோ என நான் அஞ்சுவதும் உண்டு.
நான் கடந்த 7 மாதகாலமாக எனது உடலில் மாற்றத்தை உணர்கின்றேன். உடம்பில் தெம்பு இல்லாமல் இருக்கிறது. கண்பார்வை குறைகிறது. தலைசுற்றுகிறது. சிலவேளை தலை விறைக்கின்றது.
இந்தநிலையில் வைத்தியசாலைக்கு சென்றால் உடலில் ஒரு வருத்தமும் இல்லை என்கின்றனர். ஆனால் எமக்குத்தெரிகிறது நாம் செத்துக்கொண்டிருக்கிறோம் என்று.
இன்றையநிலையில் நான் சாவதற்காக பயப்படவில்லை. ஆனால் திருமணம் முடிக்காத நிலையில் மரணிக்கின்ற நிலையில் சமுகத்தின் பார்வை வேறுவிதமாகவிருக்கும்.
நாம் பாரிய போராட்டகளத்தில் இருந்தபோதும் ஒழுக்கம் இம்மியளவும் தவறவில்லை. அந்தளவு கட்டுப்பாடு இருந்தது. அப்படியிருந்துவிட்டு இறுதியில் ஈனச்சொல்லை கேட்கவிரும்பவில்லை.
எனவேதான் எம்போன்ற போராளிகளை சர்வதேசம் விரைந்து காப்பாற்றவேண்டும். ஒருபொருளை கறையான் தினம்தினம் எப்படி அரிக்கின்றதோ அதே போன்று எமது உடலும் தினம்தினம் செயலிழந்து அழிந்துகொண்ருப்பதை உணரக்கூடியதாயுள்ளது.
எமக்களிக்கப்பட்ட உணவு, ஊசி என்பன விஷம் கலந்தது என்பது இப்போதுதான் தெரிகிறது. யாரிடம் எமது அவலநிலையை சொல்லுவது என தெரியாமல் அலைகின்றோம்.
முதல்தடவையாக ஊடகங்களிடம் நாம் வாய் திறந்திருக்கின்றோம். வழி பிறக்கவேண்டும். எமக்கில்லாவிடினும் ஏனையோர் காப்பாற்றப்ப டவேண்டும்’ என தெரிவித்துள்ளார்.