Breaking News

மற்றுமொரு யுத்தத்துக்கான பாதையை அழிக்க எம்மால் முடியும்- சம்பந்தன்..!!



பிளவுபடாத நாட்டுக்குள் அதிகாரத்தைப் பகிர்ந்துகொண்டு, பொதுமக்கள் அனைவரும் சமாதானத்துடனும் சந்தோஷத்துடனும் வாழ வேண்டுமென்பதே தமிழ் மக்களின் அபிப்பிராயமாக உள்ளது’ என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.சம்பந்தன் தெரிவித்தார்.

தென் மாகாணத்துக்கான தனது முதலாவது விஜயத்தை மேற்கொண்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர், மாத்தறை – நூப்பே பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டுறவுச்சங்க நிகழ்வொன்றில், சனிக்கிழமையன்று (27) கலந்துகொண்டிருந்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரணவின் அழைப்பின் பேரில், தெற்குக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த சம்பந்தரிடம், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘முப்படையின் தேவை, நாட்டுக்கு அத்தியாவசியமானது. நிதி, குடிவரவு – குடியகல்வு, வெளிவிவகாரம் போன்றவை தொடர்பான அதிகாரங்கள், மத்திய அரசாங்கத்திடமே இருக்க வேண்டும்’ என்றார்.

‘இந்த நாட்டைப் பிளவுபடுத்துவதற்கு, எமது கட்சி விரும்பவில்லை. மற்றுமொரு யுத்தம், இந்த நாட்டில் இடம்பெறுவதையும் நாம் விரும்பவில்லை. யுத்தத்தின் விளைவுகளை நாம் நன்கறிவோம். யுத்தமொன்று இடம்பெறுவதற்கான வழியினை இல்லாதொழிக்கவும் நாம் தயார்’ என்றும், தெற்கு ஊடகவியலாளர்களிடம், எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

அத்துடன், ‘தென் மாகாணத்துக்கு, முதற் தடவையாக விஜயம் மேற்கொண்டுள்ளேன். இதையெண்ணி நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில், நாட்டு மக்களுக்கு அவசியமானதையே செய்ய வேண்டியதே முக்கியம். இதற்கான செயற்பாடுகளையே, நாடாளுமன்றத்தில் நான் முன்னெடுத்து வருகின்றேன்’ என அவர் மேலும் குறிப்பிட்டார்.