விரக்தியின் வெளிப்பாடு..!!
ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதாகக் கூறி, ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய நல்லாட்சி அரசாங்கம், தமிழ் மக்களை இன ரீதியாகவும் மத ரீதியாகவும் ஒடுக்குகின்ற நடவடிக்கைகளை அமைதியாக, ஆரவாரமின்றி மேற்கொண்டிருக்கின்றது.
தமிழர் பிரதேசங்களில் மேற்கொள்ளப்படுகின்ற சிங்களக் குடியேற்றங்களும், அரச கடமைக்காக வடக்கிலும் கிழக்கிலும் நிலைகொண்டுள்ள பாதுகாப்புப் படையினருடைய ஆன்மீக தேவை என்ற போர்வையில் புத்தர் சிலைகளை அமைப்பது மட்டுமல்லாமல், அரச நிறுவனங்களுக்கும் தனியாருக்கும் சொந்தமான காணிகளுடன், இந்து ஆலயங்களுக்குச் சொந்தமான காணிகளிலும், அவற்றுக்கு அருகாமையில் உள்ள காணிகளிலும் அத்துமீறி பௌத்த விஹாரைகளை நிர்மாணிக்கும் கைங்கர்யமும் இடம்பெற்று வருகின்றது.
இராணுவத்தை முதன்மைப்படுத்தி சர்வாதிகாரப் போக்கில் செயற்பட்டு வந்த முன்னைய அரசாங்கம் யுத்தம் முடிவடைந்த பின்னரும், ஆயுத மோதல்கள் இடம்பெற்ற தமிழர் பிரதேசங்களில் மக்கள் குடியிருப்புக்களிலும், விவசாய கேந்திர முக்கியத்துவம் மிக்க இடங்களிலும் பெருமளவில் காணிகளைக் கைப்பற்றி படை முகாம்களை அமைத்து, இராணுவத்தினரையும் பொலிஸாரையும் மட்டுமல்லாமல் விமானப்படையினரையும் கடற்படையினரையும் கூட நிரந்தரமாக நிலை நிறுத்தியிருந்தது.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி இந்த நடவடிக்கையை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ பரந்த அளவில் மேற்கொண்டிருந்தார்.
ஆனால், இராணுவ நிர்வாகத்திற்கு இடமளிக்கப் போவதில்லை எனக் கூறி, ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதாக வாக்களித்திருந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்திலும் இந்த நிலைமை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நல்லாட்சி அரசாங்கத்தின் மீது அதிக நம்பிக்கை கொண்டிருந்த பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் இதனால் மிகுந்த ஏமாற்றமடைந்திருக்கின்றார்கள். ஆழ்ந்த கவலையும் கொண்டிருக்கின்றார்கள்.
யுத்த மோதல்கள் இடம்பெற்ற காலத்தில் தொழிலுக்காகக் கடலுக்குள் செல்ல முடியாமலும், விவசாயத் தேவைக்காக வயலுக்கோ குளத்திற்கோ செல்ல முடியாத அளவு நடமாட்ட உரிமை கட்டுப்படுத்தப்பட்டிருந்தது தொடக்கம் சுற்றி வளைப்புக்கள், தேடுதல் நடவடிக்கைகள் என்ற போர்வையில் இரவு நேரங்களில் வீடுகளில் புகுந்து சோதனையிடுவதும் கைது செய்கின்றோம் எனக் கூறி ஆட்களைக் கடத்திச் சென்றமை உள்ளிட்ட பல்வேறு அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு இந்த மக்கள் ஆளாகியிருந்தார்கள்.
எனவே, ஆட்சியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து, நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்படும் தங்கள் தங்கள் பிரதேசங்களில் நிம்மதியாகவும், அமைதியாகவும் வாழலாம் என்ற அவர்களின் நப்பாசை நிர்மூலமாகியிருக்கின்றது.
இடம்பெயர்ந்த மக்களுக்குச் சொந்தமான காணிகளில் படையினர் நிலைகொண்டு, நவீன வசதிகளுடன் சொகுசாக முகாம்களை அமைத்திருக்க அரசு வழி செய்திருக்கின்றது. ஆனால் பாதிக்கப்பட்ட மக்கள் ஓட்டைக் குடிசைகளிலும் கொட்டில்களிலும் சொல்லொணாத் துயரத்துடன் வாழ வேண்டியிருக்கின்றது. இது குறித்து புதிய அரசாங்கம் எதிர்பார்த்த அளவில் அலட்டிக்கொள்ளவில்லை.
ஆனால் பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதாகக் கூறி பெரிய அளவில் அரசியல் பிரசாரத்தைச் செய்து கொண்டு, அரசு அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறிய சிறிய அளவிலேயே காணிகளை விடுவித்து வருகின்றது. அதேநேரத்தில் புதிய புதிய இடங்களில் பொதுமக்களுக்குச் சொந்தமான இடங்களிலும், பொதுத் தேவைக்குரிய இடங்களிலும் சட்ட ரீதியாகக் காணிகளைப் பெற்றுக்கொள்வதில் படையினர் ஈடுபட்டு வருகின்றார்கள்.
மறுபுறத்தில் காணாமல் போனவர்கள் குறித்து அரசாங்கம் உரிய முறையில் பொறுப்புக் கூற தவறியிருப்பதுவும், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதில் வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, இழுத்தடித்து ஏமாற்றுகின்ற ஒரு போக்கை அரசு கடைப்பிடித்து வருவதாக, காணாமல் போயுள்ளவர்களின் உறவினர்களும், அரசியல் கைதிகளின் உறவினர்களும் குற்றம் சுமத்தியிருக்கின்றார்கள்.
எல்லோருக்கும் தெரியும்.......?
பல் வேறுபட்ட பிரச்சினைகளுக்கு தொடர்ந்து முகம் கொடுத்து வருகின்ற போதிலும், நிரந்தரமான தீர்வுகளை நோக்கிய நம்பிக்கை அளிக்கக் கூடிய அரசியல் செயற்பாடுகளோ அல்லது அரசியல் போக்குகளோ பாதிக்கப்பட்ட மக்களின் கண்களில் தென்படவில்லை.
ஆனால், 'பொறுமையாக இருங்கள். சர்வதேசம் எங்களுக்கு ஆதரவாக இருக்கின்றது. இந்த வருட இறுதிக்குள் அரசியல் தீர்வை அடைந்துவிடலாம். அதற்கான நிலைமைகள் கனிந்து வருகின்றன. நல்லாட்சி அரசாங்கத்தின் மீதும், ஜனாதிபதியின் மீதும் நம்பிக்கை இருக்கின்றது.
எனவே, நிலைமைகளை மோசமாக்கிவிடக் கூடிய நடவடிக்கைகளில் ஈடுபடாதீர்கள். முன்னைய ஆட்சியிலும் பார்க்க இப்போதைய ஆட்சியில் நிலைமைகள் எவ்வளவோ முன்னேற்றம் கண்டிருக்கின்றன. எனவே, இப்போதுள்ள நிலைமையை யாரும் குழப்பிவிடக் கூடாது. அவ்வாறு குழப்பிவிடத்தக்க நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது' என்ற அரசியல் அறிவுரையே இந்த மக்கள் அவர்கள் மலைபோல நம்பியிருக்கின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமையிடமிருந்து வந்து கொண்டிருக்கின்றது.
பிரச்சினைகள் எரியும் பிரச்சினைகளாக இருக்கின்றன என்பதை எல்லோரும் அறிந்திருக்கின்றார்கள். தமிழ்த் தலைவர்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை.
அதேபோன்று தமிழ் மக்களின் பிரச்சினைகள் என்ன, அவர்களின் எதிர்பார்ப்பு என்ன என்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்த அரசாங்கத்தின் பின்னணியில் இருந்து செயற்பட்டு வருகின்ற முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநயக்க உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் நன்கு உணர்ந்திருக்கின்றார்கள்.
அவ்வப்போது, அவர்கள் உதிர்க்கின்ற தமிழ் மக்கள் மீதான அக்கறையை வெளிப்படுத்துகின்ற அரசியல் பேச்சுக்களில் இருந்து இதனை அறியக் கூடியதாக இருக்கின்றது.
இருந்த போதிலும் எரியும் பிரச்சினைகளின் தாக்கத்தினால், மக்கள் விரக்தி நிலையை நோக்கி தள்ளிச் செல்லப்படுவதை யாரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. அவ்வாறு விரக்தி நிலைமைக்கு மக்கள் தள்ளப்படுவது என்பது விபரீதமான விளைவுகளுக்கே வழி வகுக்கும் என்ற யதார்த்தத்தை உணர்ந்து பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தத் தக்க வகையில் படிப்படியாக நடவடிக்கைகளை எடுக்கின்ற போக்கை அரசாங்கத்திடம் காண முடியவில்லை.
அதேவேளை, அரசாங்கத்துடன் அரசியல் ரீதியாக நல்லுறவு கொண்டு செயற்படுகின்ற உத்தியைக் கைக்கொண்டுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமையும், இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு மக்களுடைய நம்பிக்கையைத் தக்க வைக்கும் வழிமுறைகளில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் அரசாங்கத்தைக் கொண்டு செலுத்துவதாகவும் தெரியவில்லை.
அரசாங்கத்திற்கு சங்கடங்களை ஏற்படுத்துகின்ற வகையில் அல்லது அரசாங்கத்திற்கு வலிக்கத்தக்க வகையிலான நடவடிக்கைகளில் தமிழ் மக்கள் தரப்பில் எவரும் ஈடுபடக் கூடாது, ஈடுபட்டுவிடக் கூடாது என்பதிலேயே கூட்டமைப்பின் தலைமை கண்ணும் கருத்துமாகச் செயற்பட்டு வருகின்றதொரு போக்கையே காண முடிகின்றது.
பாதிக்கப்பட்ட மக்கள் தமது அரசியல் தலைமைகள் மீது வைத்துள்ள நம்பிக்கை மேலும் வலுப்பெற்று நிலைத்து நிற்பதற்குப் பதிலாக அதுவும் தேய்ந்து செல்வதற்கே இந்தப் போக்கு வழி வகுத்திருக்கின்றது.
இத்தகைய ஒரு பின்னணியில்தான், தமிழ் மக்கள் பேரவையின் பெரிய அளவிலான கண்டனப் பேரணிக்கான அழைப்பு வெளிவந்திருக்கின்றது.
பேரவையின் கண்டனப் பேரணி
தமிழ் மக்களுக்குச் சொந்தமான பிரதேசங்களில் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை உருவாக்குவதற்காகவே, புதிய சிங்களக் குடியேற்றங்களும், விஹாரைகளும் மிக வேகமாக நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன என்று தமிழ் மக்கள் பேரவை அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தி அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி ஒரு கண்டனப் பேரணிக்கு அழைப்பு விடுத்திருக்கின்றது.
புதிய அரசாங்கத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் இல்லை. முன்னைய அரசாங்கத்திலும் பார்க்க இந்த அரசாங்கம் எவ்வளவோ மேல் என்ற நம்பிக்கை சார்ந்த உணர்வு தமிழ் மக்களிடம் இருக்கத்தான் செய்கின்றது. ஆயினும் தமிழ் மக்களின் நம்பிக்கையையும் நம்பிக்கை உணர்வையும் மேம்படுத்துவதற்குப் பதிலாக அதனை சிதறடிப்பதற்கான நடவடிக்கைகளே அரச தரப்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதனையே தமிழ் மக்கள் பேரவையின் கண்டனப் பேரணி வெளிச்சம் போட்டு காட்ட முனைந்திருக்கின்றது.
'கிழக்கு மாகாணத்தில் வெற்றிகரமாக பல தசாப்தங்களாக மேற்படி சிங்கள பௌத்த மயமாக்கல் வேலைகளை முன்னெடுத்து வந்துள்ள நிலையில், தற்போது வடமாகாணத்திலும் இவ்வாறான புதிய சிங்கள குடியேற்றங்களும், இராணுவக் குடியிருப்பும், யுத்தத்திற்குப் பின்னர் உருவாக்கப்பட்டுள்ளன என தமிழ் மக்கள் பேரவை தனது கண்டன பேரணிக்கான அழைப்பில் சுட்டிக்காட்டியிருக்கின்றது.
தமிழ்த் தேசத்தின் பொருளாதாரம், கலாசாரம், மொழி என்பவற்றை அழித்தல், குடிப்பரம்பலை மாற்றியமைத்தல் போன்ற திட்டமிட்ட செயற்பாடுகள் ஒட்டு மொத்தமாக தடுத்துநிறுத்தப்படல் வேண்டும் என்பது பேரவையின் நிலைப்பாடு.
சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை உருவாக்கக் கூடிய இத்தகைய நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். இடம்பெயர்ந்துள்ள மக்கள் முழுமையாக மீள் குடியேறத் தக்க வகையில் இராணுவம் ஆக்கிரமித்துள்ள காணிகள் விடுவிக்கப்படுவதுடன், தமிழர் பிரதேசங்களில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும். போர்க் குற்றச் சம்பவங்களுக்குப் பொறுப்பு கூறலுக்காக முழு அளவிலான பக்கச் சார்பற்ற சர்வதேச விசாரணை பொறிமுறையே அமைக்கப்பட வேண்டும். காணாமல் போகச் செய்யப்பட்டோர் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி உடனடியாக விடுவிப்பதுடன், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என்ற ஆறு கோரிக்கைகளை முன்வைத்து தனது கண்டனப் பேரணியை மக்கள் பேரவை நடத்தவுள்ளது.
பேரவையின் முதலாவது மக்கள் போராட்ட நடவடிக்கை
தமிழ் மக்கள் பேரவையின் முதலாவது மக்கள் போராட்டமாக இந்த கண்டனப் பேரணி நடைபெறவுள்ளது.
இதன் காரணமாக இதனை ஒழுங்கு செய்வதற்காக பலத்த முன் ஆயத்தங்களை அந்த அமைப்பு செய்திருந்ததைக் காண முடிகின்றது. இது குறித்து பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் விவாதித்து அதன் பின்பே கண்டனப் பேரணிக்கான ஏற்பாடுகளை பேரவை செய்திருக்கின்றது.
அரசியல் ரீதியாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பே தமிழ் மக்களின் பலமான அரசியல் தலைமையாகத் திகழ்கின்றது.
அதிலும், கூட்டமைப்புக்குத் தலைமையேற்றுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி கூட்டமைப்புக்குள் அதிகார பலம் கொண்டதாகச் செயற்பட்டு வருவது அனைவரும் அறிந்த ஒன்றாகும். இதன் காரணமாகவே, கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற ஏனைய கட்சித் தலைவர்களுடன் கலந்து பேசாமலேயே பல காரியங்களை கூட்டமைப்பின் தலைமை முன்னெடுத்துச் செல்வதையும், ஏனையவர்கள் அதனை கண்டிப்பதையும், அதனால், கூட்டமைப்புக்குள்ளேயே ஒற்றுமை இல்லாத ஒரு தன்மையையும் வெளிப்படையாகக் காண முடிகின்றது.
கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்கின்ற கூட்டங்களிலும் பார்க்க, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுடைய கூட்டங்களிலேயே அதிகமான விடயங்கள் பேசப்படுவதாகவும், கட்சித் தலைவர்களின் கூட்டங்கள் மிகக் குறைவாகவே நடத்தப்படுகின்றன என்ற குற்றச்சாட்டும் கூட்டமைப்பின் தலைமைக்கு எதிராக உண்டு.
இத்தகைய ஒரு நிலைமையில்தான் தமிழ் மக்கள் பேரவை உருவாகியது. அதில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இணைத் தலைவராக இணைந்தார். அத்துடன் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றாகிய ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனும் பேரவையில் முக்கியஸ்தராகப் பங்கேற்றுள்ளார்.
தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டபோது, அது தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு எதிரான ஒரு அரசியல் கட்சியாக - கூட்டமைப்பின் தலைமையில் ஓர் அணியாக ஒற்றுமையாகத் திரண்டுள்ள தமிழ் மக்களைப் பிளவுபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு கட்சிக்குரிய அமைப்பாகவே தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமையினால் நோக்கப்பட்டது,
குறிப்பாக தமிழரசுக் கட்சியினரும், அதன் ஆதரவாளர்களும் தமிழ் மக்கள் பேரவையை ஒரு எதிர் அரசியல் கட்சியாகவே நோக்கினர். அந்த வகையிலேயே அறிக்கைகளும் காரசாரமான விமர்சனங்களும் வெளிவந்திருந்தன.
அது மட்டுமல்லாமல், தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் - தமிழரசுக் கட்சியில் இருந்து கொண்டு இன்னுமொரு அரசியல் கட்சிக்குரிய அமைப்பாகிய தமிழ் மக்கள் பேரவையில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கடசியின் அனுமதியின்றி எவ்வாறு அதன் இணைத் தலைவராகச் செயற்படலாம் என்ற கேள்வியும் மிக காரசாரமாக முன்வைக்கப்பட்டு, அவருக்கு அதனால் பல நெருக்கடிகளும் உருவாகியிருந்தன.
தாங்கள் ஒரு அரசியல் கட்சியல்ல என்பதை நிலைநிறுத்துவதற்காக தமிழ் மக்கள் பேரவை படாதபாடுபட வேண்டியிருந்தது. அரசியல் தீர்வுக்கான ஆலோசனைகளை தமிழ் மக்கள் பேரவை முன்வைத்தபோது, அதனை ஏற்றுக்கொள்வதற்கும் கூட்டமைப்பின் தலைமை தயாராக இருக்கவில்லை.
அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்கான சந்தர்ப்பம்....?
இத்தகைய ஒரு பின்னணியில்தான் தமிழ் மக்கள் பேரவை தமிழ் மக்களை ஒன்று திரட்டி பெரிய அளவிலான ஒரு கண்டனப் பேரணியை நடத்துவதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
ஆனால் தமிழ் மக்கள் பேரவையின் கண்டனப் பேரணி நடவடிக்கையானது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமையை நிலை தடுமாறச் செய்திருப்பதையே உணர முடிகின்றது. ஏனெனில் தற்போதைய அரசியல் நிலைமைகளை எவரும் குழப்பக்கூடாது, அரசாங்கத்திற்கு சங்கடம் தருகின்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என்ற நடைமுறைச் செயற்பாட்டில் சென்று கொண்டிருக்கின்ற கூட்டமைப்புத் தலைமையின் நிலைப்பாட்டிற்கு நேர் விரோதமான நடவடிக்கையாகவே இந்த கண்டனப்; பேரணி நோக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.
தமிழ் மக்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காக நடத்தப்படுகின்ற இந்த கண்டனப் பேரணியானது, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை அரசாங்கத்துடன் கொண்டிருக்கின்ற இணங்கிப் போகின்ற போக்கிற்கு முரணான ஒரு நடவடிக்கையாகவே அரசாங்கத் தரப்பினாலும் நோக்கப்படும் என்பதிலும் சந்தேகமில்லை.
அதேவேளை, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமையினால், மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் - மக்களால் தோற்கடிக்கப்பட்டவர்களின் கூட்டு அமைப்பில் உருவாக்கப்பட்ட ஒரு அரசியல் அமைப்பாகவே தமிழ் மக்கள் பேரவை இன்னும் கருதப்படுகின்றது. குறிப்பாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார், ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் பேரவையில் இணைந்து மீண்டும் தாங்கள் பாராளுமன்ற பிரதிநிதியாக வருவதற்காகவே, இந்த புதிய அமைப்பை உருவாக்கி, தங்களுக்கு எதிராகச் செயற்படத் தொடங்கியிருக்கின்றார்கள் என்ற கருத்தும் கூட்டமைப்பின் தலைமையிடம் வலுவாகக் காணப்படுகின்றது.
இந்த நிலைமையில் பெரிய அளவில் மக்களை ஒன்று திரட்டி ஒரு கண்டனப் பேரணியை நடத்துவதற்குப் பேரவை எடுத்துள்ள முயற்சியானது, கூட்டமைப்பின் தலைமைக்கு பெரும் தலையிடியாகவே அமைந்துள்ளது என்பதில் எந்தவித சந்தேகமும் இருக்க முடியாது.
எல்லாமே நாங்கள். எங்களை அறியாமல் எதனையும் தமிழ் மக்களுக்காக எவரும் செய்யக் கூடாது என்ற போக்கில் செயற்பட்டு வருகின்ற கூட்டமைப்பின் தலைமைக்கு பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் இளைஞர் அணியின் ஆதரவுடன் கிளிநொச்சியில் நடத்தப்பட்ட நீதிக்கான நடை பவனியும்கூட, எரிச்சலை ஊட்டியிருந்ததாகவே கூறப்படுகின்றது.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பினால் ஒழுங்கு செய்யாமல் எவ்வாறு அத்தகைய நீதிக்கான நடை பயணம் என்ற பெயரில் பேரணி நடத்த முடியும் என்று காரசாரமான கேள்வி கூட்டமைப்பின் தலைமையினால் கேட்கப்பட்டதாகவும் கேள்வி.
எது எப்படி இருப்பினும், தமிழ் மக்கள் பேரவையின் கண்டனப் பேரணியானது, பாதிக்கப்பட்ட மக்களின் ஏமாற்ற உணர்வையும், அவர்கள் மத்தியில் முளைவிட்டுள்ள விரக்தியையும் வெளிப்படுத்துவதற்கான ஒரு வடிகாலாகவே அமையும் என்பதில் சந்தேகமில்லை.
அதேவேளை, தமிழ் மக்கள் எத்தகைய உணர்வைக் கொண்டிருக்கின்றார்கள், அடிமட்ட மக்கள் மத்தியில் எவ்வாறான நிலைமை நிலவுகின்றது என்பதை இந்தப் பேரணியை ஆதாரமாகக் காட்டி, முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கான வாய்ப்பாக, அரசாங்கத்துடன் நல்லுறவைக் கொண்டுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை இதனைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கலாம்.
ஆனால் கூட்டமைப்பின் தலைமை அவ்வாறு செய்யுமா என்பது தெரியவில்லை.
-செல்வரட்னம் சிறிதரன்