ஒரு பக்கம் சமாதானப் பேச்சு; மறுபக்கம் சதிவேலைத்திட்டம்..!!
சுனாமியின் போது பாரிய கடல் அலைகள் எம் இடங்களையும், மக்களையும் அவர்தம் ஆதனங்களையும் கபளீகரம் செய்தனவோ அதையொத்த விதத்தில் எமது பாரம்பரிய நிலங்கள் பறிபோகின்றன.
பல நூற்றாண்டு கால வாழ்க்கை முறை சிதைவடைந்து வருகின்றது. ஒரு பக்கத்தால் சமாதானம் பேச மறுபக்கத்தில் சதிவேலைகள் நடந்து வருவதை நாம்; சுட்டிக்காட்டினால் எமக்குத் தீவிரவாதிகள் பட்டம் சூட்டுகின்றனர். இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சரும் முன்னாள் நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.பொது நூலகத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் அ.அமிர்தலிங்கத்தின் 89 அவது பிறந்த தின நிகழ்வில் நினைவு பேருரை ஆற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்;
1949ம் ஆண்டு டிசெம்பர் மாதம் 18ந் திகதியன்றே இலங்கைத் தமிழரசுக் கட்சி உதயமாகியது. அதன் முக்கிய குறிக்கோளாக வடக்கு கிழக்கு மாகாணங்கள் மொழிவாரியாகத்தன்னாட்சி உரிமை பெற்ற சமஷ்டி அலகாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. பல தடவைகளில் அரசாங்கத்திற்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையில் உடன்பாடுகள் தயாரிக்கப்பட்டு, கைச்சாத்தும் இட்ட பின்னர் கிழித்து வீசப்பட்டன.
இதனால் சமஸ்டி அமைப்பின் கீழ் தன்னாட்சி என்ற கோரிக்கைக்குப் பதிலாக வெளிநாட்டவர் இலங்கைக்கு வர முன்னர் தமிழ் மக்களுக்கிருந்த சுதந்திர நாடு மீண்டும் அவர்களுக்கு வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கை வலுப் பெற்றது. அதுவே ஆயுதமேந்தியவர்களின் குரலாகவும் ஒலித்தது.
இன்று ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட நிலையில் நாம் மீண்டும் சமஸ்டி அமைப்பின் கீழ் தன்னாட்சி கோரிக்கைக்கே தள்ளப்பட்டுவிட்டோம். எனினும் இன்றைய கள நிலை மிகவும் மோசமடைந்து வருகின்றது என்பதை எமது மக்கள் முற்றாக உணர்ந்துள்ளார்களோ நான் அறியேன்.சில உதாரணங்களைக் கூறுகின்றேன். போர் முடிந்து ஏழு வருடங்களுக்குப் பின்னர் வடகிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினருக்கும், கடற்படையினருக்கும்,
ஆகாயப் படையினருக்கும் இங்கு என்ன வேலை? முன்னர் காலத்திற்குக் காலம் மட்டும் தெற்கில் இருந்து எமது இடங்களில் மீன்பிடிக்கத் தற்காலிகமாக இடம்பெயர்ந்து வந்த தென்பகுதி மக்கள் இன்று நிரந்தர வதிவிடங்களை இராணுவத்தினர் உதவியுடன் முல்லைத்தீவுக் கடற்கரைகளில் அமைப்பதன் சூட்சுமம் என்ன? பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்தின் அடிப்படையில் எமது கனிய வளங்கள் தெற்கில் இருந்து வருபவர்களால் சூறையாடப்பட்டுச் செல்வது எமது மக்களுக்கு புரியவில்லையா? எமது காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன.
கூகிள் மூலமாய்ப் பார்த்தால் ஆழ்ந்த வனப் பிரதேசங்களின் மத்தியில் மரங்கள் பல வெட்டப்பட்டு காடுகள் அற்ற நிலையில் பல இடங்கள் மொட்டையாகக் காட்சி அளிக்கின்றன. இதன் மர்மம் என்ன? நாம் எமது இராணுவ முகாம்களை மூடிக் கொண்டு வருகின்றோம் என்று அரசாங்கம் கூற அமெரிக்க நிறுவனம் ஒன்று படமெடுத்து 2009ன் பின்னர் 2014 வரையான காலப் பகுதியில் இராணுவ முகாம்களின் எல்லைகள் மேலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளன,கூடிய காணிகள் கையேற்கப்பட்டுள்ளனஎன்று தெரிவிப்பதன் தாற்பரியம் என்ன? நேற்றைய தினம் வடமாகாண இராணுவத்தளபதியால் பலாலிக் காணிகள் கைவிடப்படமாட்டா மாறாக கையேற்கப்படுவன என்று கூறியதன் அர்த்தம் என்ன?
காணாமல்போனோர், சிறைகளில் அரசியல் காரணங்களுக்காக வாடுவோர், விடுவிக்கப்பட்டும் உடல் உளப் பாதிப்புக்களுக்கு உள்ளானோர், முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு நடைப் பிணங்களாக நடமாடும் எமது மக்கள், எமது இளம் விதவைகள்,பெண் தலைமைத்துவக் குடும்பங்கள்,தாய் தந்தையர் அற்ற அநாதைக் குழந்தைகள், பாலியல் பாதிப்புக்களுக்கும் போதைப் பொருட் பாவனைக்கும் உள்ளாகி வரும் எமது இன்றைய சமூதாயம் - இவ்வாறு எமது சமுதாயம் சின்னாபின்னப்பட்டு சிதைந்து வாழ்ந்து வரும் சூழல் எதனை எமக்கு எடுத்துக் காட்டுகின்றது?
அதைவிட நாட்டின் எந்த இடத்திலும் பௌத்த விகாரைகளைக் கட்டலாம் சிங்கள மக்களைக் குடியேற்றலாம் என்று கூறும் ஆட்சிப் பொறுப்பில் உள்ளோரின் கூற்றுக்கள் எதனை எடுத்துக் காட்டுகின்றன? எமது இன்றைய இளைய சமுதாயம் எவ்வாறாயினும் வெளிநாடுகளில் சென்று குடியேற வேண்டும் என்ற வெறியில் வாழ்ந்து வரும் பாங்கு எதனை வெளிப்படுத்துகின்றது? கொழும்பில் அனுமதி பெற்று எமக்குத் தெரியாமல் சுற்றுலா மையங்கள் எமது பாரம்பரிய இடங்களில் வெளியார்களால் அமைக்கப்பட்டு வருவது எதைக் காட்டுகின்றது?
என் கணிப்பின் படி நாங்கள் சிறுகச் சிறுக அழிக்கப்பட்டு வருகின்றோம். எவ்வாறு சுனாமியின் போது பாரிய கடல் அலைகள் எம் இடங்களையும், மக்களையும் அவர்தம் ஆதனங்களையும் கபளீகரம் செய்தனவோ அதையொத்த விதத்தில் எமது பாரம்பரிய நிலங்கள் பறிபோகின்றன. பல நூற்றாண்டு கால வாழ்க்கை முறை சிதைவடைந்து வருகின்றது. ஒரு பக்கத்தால் சமாதானம் பேச மறுபக்கத்தில் சதிவேலைகள் நடந்து வருவதை நாம்; சுட்டிக்காட்டினால் எமக்குத் தீவிரவாதிகள் பட்டம் சூட்டுகின்றனர்;. எம்முடைய மக்களே எமக்கு இப்பேர்ப்பட்ட பட்டங்களைச் சூட்டுகின்றார்கள்.
தன்னைப் பாதுகாத்துக் கொள்ளத் தெரிந்த ஒரு இளம் பெண் சடுதியாக அறிமுகமான ஒரு ஆண் எங்கோ செல்லத் தன்னை அழைக்கின்றான் என்றால் அவனை ஏதோ ஒரு சபல புத்தி ஆட்கொண்டிருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்வாள். அறுபது வருடங்களுக்கு மேலாக எமக்கு எந்தவித நன்மைகளையுந் தந்துதவாத அரசாங்கம் தற்பொழுது முண்டியடித்துக் கொண்டு முதலீடுகளைச் செய்யவும் செயற்திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கவும் முன்வந்தால் அவற்றின் அடிப்படைக் காரணங்களை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். தருவனவற்றை வேண்டாம் என்று நான் கூற வரவில்லை. தந்துவிட்டு அவர்கள் எம்மிடம் இருந்து எதனை எதிர்பார்க்கின்றார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
எப்படியான சூழலை எம்மைச் சுற்றி ஏற்படுத்திக் கொண்டு அவர்கள் தமது கோரிக்கைகளை முன்வைக்கின்றார்கள் என்பதை அறியப்பார்க்க வேண்டும். முதலீடுகள் வந்தால் பிரச்சனைகள் முற்றிலும் தீர்ந்துவிடும் என்று எண்ணுவாரும் உளர் எம்மத்தியில். அவ்வாறான சிந்தனைகள் சரிதானா என்று எமது புத்தி ஜீவிகள் ஆய்ந்துரைக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. என்றார் முதலமைச்சர்.