முல்லைத்தீவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் உண்ணாவிரதத்தில்
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசெயலர் பிரிவில் செல்வபுரம் கிராமத்தில் ஒரே குடும்பத்தைத்சேர்ந்த 6 பேர் உண்ணாவிரத போராட்டத்தினை நேற்று வியாழக்கிழமை காலை முதல் ஆரம்பித்துள்ளனர்.
தமக்கு 7 வருடங்களாக அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தும், குறித்த பிரதேசசெயலர் பிரிவில் கடமையாற்றும் கிராம சேவையாளரும், காணி அலுவலரும் பக்க சார்பாக செயற்படுவதாக தெரிவித்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக போராட்டகாரர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த பகுதியில் 83 ஆம் ஆண்டுமுதல் வாழ்ந்து வருவதாகவும், தமது காணியை பிறிதொரு நபர் உரிமை கோரி வந்த நிலையில் காணி பிணக்கு 7 வருடமாக காணப்படுவதாகவும் தெரிவிக்கும் குறித்த குடும்பத்தினர், இன்று வரை தமக்கான நீதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கின்றனர்.
குறித்த காணி விடயம் தொடர்பில் தமக்கு எதிராக முல்லைத்தீவு நீதிமன்றில் எதிர்தரப்பினரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், குறித்த காணிக்கான காணி உரிமத்தினை எதிர் தரப்பினருக்கு வழங்கலாம் என மாகாண காணி ஆணையாளர் தெரிவித்ததாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
தமக்குரிய நீதி கிடைக்கும் வரையில் தாம் தொடர் உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுக்க உள்ளதாகவும், மனித உரிமைகள் ஆணைக்குழுவும், அரசியல்வாதிகளும் வருகை தரும் பட்சத்திலேயே தமது போராட்டம் கைவிடப்படும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
தாம் 7 வருடமாக எவ்வித பாதுகாப்புமற்ற தற்காலிக கொட்டகையிலேயே வசித்து வருவதாகவும், தமக்கு மலசல கூடம், வீட்டு திட்டம் உட்பட எவ்வித அரச உதவிகளையும் கிராம சேவையாளர் தருவதில்லை எனவும் குறித்த குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
நீதிமன்று ஒன்றில் வழக்கொன்று இடம்பெற்று கொண்டிருக்கையில், அரச அதிகாரிகள் பக்க சார்பாக செயற்படுகன்றமை பக்க சார்பான செயற்பாடாகவே தாம் கருதுவதாகவும், இதற்கு அரச உயரதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தம்மை போன்று வேறு எவரும் பாதிக்கப்படாதவாறு நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதேவேளை கடந்த 23 ஆம் திகதி அதே பகுதியில் யுத்தத்தின் போது கணவனை இழந்தும் 2 பிள்ளைகளை பறிகொடுத்தும் வாழ்ந்து வரும் தாயார் ஒருவர் உரிமை கோரும் காணியில் விளையாட்டு மைதானத்திற்கான காணி அலுவலர் மற்றும் கிராம சேவையாளரினால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.