ஆம்புலன்ஸ் இல்லை - இறந்த மனைவியை தோளில் சுமந்து கணவர்
ஒடிசா மாநிலத்தின் பவனிபட்னா பகுதியில் நேற்று காலை ஒரு மனிதர் தனது தோளில் ஒரு போர்வையால் மூடப்பட்டிருக்கும் தனது மனைவியின் பிணத்தை சுமந்து கொண்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். 12 வயதுமிக்க அவரது மகள் அந்த மனிதருடன் நடந்து சென்றார்.
மாவட்ட அரசு மருத்துவமனையில் இருந்து இறந்த தன்னுடைய மனைவியை வீட்டிற்கு கொண்டு செல்ல வாகன வசதி எதுவும் கிடைக்காததால் இவ்வாறு அந்த மனிதர் நடந்தே சென்று கொண்டிருந்தார். மருத்துவமனையில் இருந்து அவரது வீடு சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
சுமார் 10 கிலோமீட்டர் தூரம் நடந்த பின்னர் தொலைக்காட்சி குழு ஒன்று அவரை அணுகி விசாரித்துள்ளது. அப்போது, ஒடிசா மாநிலத்தின் பின் தங்கிய மாவட்டமான காளஹந்தியை சேர்ந்த மஜ்ஹி என்ற அந்த மனிதரின் 42 வயது மனைவி அமங் தேய் காசநோய் தாக்கி மருத்துவமனையில் உயிரிழந்தது தெரிய வந்தது.
மேலும், “நான் மிகவும் ஏழை மனிதன் என்றும் என்னால் இறந்த மனைவியை கொண்டு செல்ல வாகனம் தாயார் முடியாது என்றும் மருத்துவமனை அதிகாரிகளிடம் கூறினேன். எந்த உதவியும் செய்ய முடியாது என்று அவர்கள் கூறிவிட்டனர்” என்று மஜ்ஹி அவர்களிடம் தெரிவித்தார்.
முன்னதாக, பொருளாதார ரீதியாக பின் தங்கிய மக்களை கருத்தில் கொண்டு இலவச அமரர் ஊர்தி திட்டத்தை முதல்-மந்திரி நவீன் பட்நாயக் கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகப்படுத்தி இருந்தார். இருப்பினும் நிறைய மருத்துவமனைகள் அந்த திட்டத்தை முறையாக கடைபிடிப்பதில்லை.
உடனடியாக அந்த தொலைக்காட்சி குழுவினர் மாவட்ட கலெக்டரை தொடர்ந்து கொண்டு மீதமுள்ள 50 கிலோமீட்டர் செல்ல வாகனம் ஏற்பாடு செய்தனர்.
இறந்த மனைவியை கொண்டு செல்ல வாகனம் கிடைக்காமல் சாலையில் தோளில் சுமந்து கொண்டு சென்ற கணவர் பற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.