வசீம் தாஜுதீன் கொலை:தொலைபேசி பதிவுகள் அழிப்பு
பிரபல ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் கொலை இடம்பெற்ற தினத்தில் ஜனாதிபதி செயலகம் மற்றும் அலரி மாளிகை என்பவற்றிலிருந்து நாரஹேன்பிட்டி பொலிஸ் பொறுப்பதிகாரி டெமியம் பெரேராவுக்கு விடுக்கப்பட்டதாக கூறப்படும் தொலைபேசி அழைப்புக்கள் பற்றிய பதிவுகளை ஜனாதிபதி செயலயம் அழித்துள்ளதாக இரகசியப் பொலிஸார் நேற்று (24) நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு மேலதிக மஜிஸ்ட்ரேட் நிஷாந்த பீரிஸ் முன்னிலையில் இரகசியப் பொலிஸார் இந்த தகவலை இன்று முன்வைத்துள்ளனர்.
குறிப்பிட்ட அழைப்புக்களுக்கு பொறுப்பானவர் அதனை பதிவுகளிலிருந்து அழித்துள்ளதாகவும், குறித்த பொறுப்பதிகாரிகள் தற்பொழுது அந்தப் பதவிகளிலிருந்து இராஜினாமா செய்துள்ளதாகவும் இரகசியப் பொலிஸார் நீதிபதியிடம் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறு தொலைபேசி அழைப்பு தொடர்பான பதிவுகளை நீக்கிய அதிகாரிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த அழைப்புக்கள் விடுத்ததற்கான பதிவுகள் உள்ள கணனி (CPU) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பிலும் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இரகசியப் பிரிவு நீதிமன்றத்திடம் குறிப்பிட்டுள்ளது.
இந்த தகவல்கள் ஜனாதிபதி செயலகத்திலுள்ள இரு அதிகாரிகளிடம் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்டதாகவும் இரகசியப் பொலிஸார் நீதிமன்றத்திடம் கூறியுள்ளனர்.