திருகோணமலைக் கடலில் இராணுவம் ஆயுதங்கள் புதைப்பு : பொ.ஐங்கரநேசன்
திருகோணமலைக் கடலில் இராணுவம் ஆயுதங்களை ஆழ புதைத்து வைத்துள்ளார்கள் என்ற இரகசிய தகவல் தற்போது கசிந்துள்ளதாக விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
இன்று காலை இடம்பெற்ற, கடற்தொழிலின்போது கடலில் மரணமடைந்த மீனவக் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,
போருக்கு முன்னரான காலப்பகுதியில் ஒட்டு மொத்த பொருளாதாரத்திலும் வடக்கு மாகாண மீன்பிடித் துறை காத்திரமான பங்களிப்பை வழங்கி இருந்தாலும், போர் அதனை நிர்மூலமாக்கி விட்டது. கடலோடு பிறந்து வளர்ந்தவர்களுக்கு போர் காலத்தில் கடலுக்கு செல்லமுடியாத நிலை காணப்பட்டது. யுத்தத்திற்கு பின்னர் கூட இராணுவப் பிரசன்னத்தால் இந்த மீன்பிடித்துறையை விருத்தி செய்யமுடியாத நிலை காணப்படுகிறது.
இந்திய இழுவைப் படகுகளாலும் தென்னிலங்கையில் இருந்து வரும் தொழிலாளர்களாலும் வட பகுதி மீனவர்கள் பாரிய இன்னல்களை எதிர் நோக்குகின்றனர். இயற்கையான பிரசித்தி பெற்ற மயிலிட்டி துறைமுகத்தை எங்களுக்கு தருவதற்கு அரசாங்கம் தயாராக இல்லை. யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டு 9வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் கூட அரசாங்கம் விடுவிப்பதற்கு தயாராக இல்லை எனவும் தெரிவித்தார்.
தெற்கில் சலாவ எனும் இடத்தில் இராணுவ ஆயுதக்கிடங்கு வெடித்ததில் பல வீடுகள் சேதமாகின. அவ் வீடுகளுக்கு அரசாங்கம் உடனடியாக இழப்பீடு தொகைகளை வழங்கியது. ஆனாலும் தென்பகுதி மக்கள் அவ் இழப்பீடு தொகை போதாது என்கிறார்கள். ஆனால் நாம் யுத்தத்தினால் உறவுகளையும் உடைமைகளையும் இழந்துள்ளபோதும் அதற்கான இழப்பீடு தொகையை தருவதற்கு அரசாங்கம் பின்னடிக்கிறது.
மேலும் மியிலிட்டி துறைமுகம் தனது பாதுகாப்பிற்காகவும் தனது தேவைகளுக்காகவும் வைத்திருப்பதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது.
உண்மையில் நாம் அறிந்த தகவலின் படி அங்கு இருக்க கூடிய ஆயுதங்களை இரவுவோடு இரவாக உலங்கு வானூர்திகள் முலம் ஏற்றிச் சென்று திருகோணமலைக் கடலுக்கடியில் ஆழ புதைத்திருப்பதாக இராணுவ அதிகாரிகள் மூலமாக சில தகவல்கள் கசிந்துள்ளதாக கூறினார்.
அரசாங்கத்தை பொறுத்தவரையில் சலாவ வெடிபொருள் கிடங்கில் ஏற்பட்ட விபத்தை போல் வெடி விபத்து ஏற்படுமானால் அரசாங்கத்தினால் ஏன் இவ்வளவு வெடி பொருட்கள் சேமிக்கப்பட்டிருந்தது என்பது அரசாங்கத்திற்கு பாரிய அப கீர்த்தியை ஏற்படுத்திவிடும் என அரசு எண்ணியிருக்கிறார்கள் என தெரிவித்தார்.
மேலும் அதற்காகவே திருகோணமலைக் கடலில் ஆயுதங்களை ஆழ புதைப்பதென்து நாம் நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாது. அது நிச்சமாக எமது மீணவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலான விடயமாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.
மேலும் இவ்வாறு தாங்கள் நினைத்தது போல் கடலுக்கடியில் ஆயுதங்களை புதைப்பது சர்வதேச சட்டங்களில் கூட தடைசெய்யப்பட்ட ஒன்றாகும் எனவும் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்தார்.