போனால் போகட்டும் போடா…!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலவீனப்ப டுத்துவதற்குரிய முயற்சியில் மஹிந்த ஆதரவு அணியினர் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், கட்சியை பலப்படுத்துவதற்குரிய நடவடிக்கையில் மைத்திரி இறங்கியுள்ளார்.
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்’ என்பது போல் இது விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சி கைகட்டி வேடிக்கைப் பார்த்து வருகிறது.
இவ்வாறானதொரு பின்புலத்தில் சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடியது.
மஹிந்தவின் பாதயாத்திரையில் களமிறங்கிய சு.க.உறுப்பினர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என கட்சியின் மூத்த உறுப்பினர்கள் இதன்போது வலியுறுத்தினர்.
எனினும், நடவடிக்கை எடுத்தால் கட்சி உடைந்துவிடும்; மஹிந்த வெளியேறி விடுவார் என்று மேலும் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இருதரப்பு கருத்துகளையும் செவிமடுத்த மைத்திரி, “இதுவரை காலமும் பொறுமைகாத்து விட்டேன். இனியும் அமைதியாக இருந்தால் நெருக்கடி ஏற்படும். ஆகவே, நடவடிக்கை எடுத்தேயாகவேண்டும். கட்சியைவிட்டு வெளியேறுபவர்கள் வெளியேறட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.